மங்கோலிய நாட்டுடன் அணுசக்தி உடன்பாடு உள்பட 5 உடன்பாடுகளை இந்தியா செய்து கொண்டுள்ளது.
இந்தியா மீது அணு எரிபொருள் சப்ளை நாடுகள் (என்எஸ்ஜி) விதித்திருந்த 34 ஆண்டுகால தடை நீங்கிய பின்னர் இந்தியா அணுசக்தி உடன்பாடு செய்துகொள்ளும் 6-வது நாடு மங்கோலியா.
முன்னதாக அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், கஜகஸ்தான், நமீபியா ஆகிய நாடுகளுடன் அணுசக்தி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மங்கோலியாவுடனான உடன்பாடுகள் அந்நாட்டு அதிபர் சகியாஜின் எல்பக்டோர், பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் தில்லியில் திங்கள்கிழமை எட்டப்பட்டது.
யுரேனிய வளம் அதிகம் உள்ள நாடுகளில் மங்கோலியாவும் ஒன்று. இந்நிலையில் அந்நாட்டுடன் அணுசக்தி உடன்பாடு செய்து கொண்டுள்ளநிலையில் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இந்தியாவுக்கு யுரேனியமும், அணுசக்தி தொழில்நுட்பங்களும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
அணுசக்தி உடன்பாடு தவிர்த்து, வேளாண்மை, சுகாதாரம், கலாசாரம், சுரங்கம் ஆகிய துறைகளில் மங்கோலியாவுடன் இந்தியா உடன்பாடுகளை செய்துகொண்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையேயான உடன்பாடுகள் கையெழுத்தான பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, அணுசக்தி, வேளாண்மை, சுகாதாரம், கலாசாரம், சுரங்கம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் தங்களது பரஸ்பர ஒத்துழைப்பை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிதி உதவி: உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார தேக்க நிலையால் மங்கோலியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து அந்நாடு மீளுவதற்கு உதவியாக இந்தியா ரூ.125 கோடி நிதி உதவி அளித்துள்ளது. மங்கோலியாவின் நலனை கருத்தில் கொண்டு இந்தியா அளித்த நிதி உதவிக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் சகியாஜின் எல்பக்டோர்.
Leave a Reply