ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர் தினம். இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களின் பெருமைகளை போற்றும் திருநாள். பல்கலைக்கழகங்களோடு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சீரிய சிந்தனைகளோடு செயல்படுவதன் மூலம்தான், ஆற்றல் மிக்க அறிவு படை தொடர் தொடராய் எழுந்திட முடியும். அந்த அறிவு படையை உருவாக்கும் பெரும் பொறுப்புடன் பணிபுரிபவர்கள் ஆசிரிய பெருமக்கள்.
இந்த ஆசிரியர்களின் அருமையை அவனிக்கு புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக பணி தொடங்கி, இந்த நாட்டின் மிக உயரிய பதவியாகிய குடியரசு தலைவர் பதவியை அணி செய்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த பொன்னாளே இந்த ஆசிரியர் தினம்.
இந்நன்னாளில் சீரிய சிந்தனைகளோடு, கூரிய அறிவாற்றல் திறனை பயன்படுத்தி குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கல்வி செல்வத்தை வழங்கி வரும் ஆசிரிய பெருமக்கள் அனைவர் வாழ்விலும் வளம் செழித்து, நலம் பெருக உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இந்நன்னாளில் மத்திய அரசின் விருதையும், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதையும் பெற்று மகிழும் ஆசிரிய பெருமக்களுக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுகள் உரித்தாகுக.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Leave a Reply