சென்னை: உரிய வாடகை செலுத்தாததால், குத்தகைக்கு விடப்பட்ட இரண்டு விமானங்களை பறிமுதல் செய்வதற்கு அட்வகேட் கமிஷனரை நியமிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வெளிநாட்டு நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. இரண்டு மாத பாக்கித் தொகையை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணை, வரும் 1ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் உள்ள இ.சி.சி., லீசிங் நிறுவனம் தாக்கல் செய்த மனு: சென்னையில் உள்ள பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம், எங்களிடம் இருந்து இரண்டு விமானங்களை குத்தகைக்கு எடுத்தது. இதற்கான ஒப்பந்தம் 2005ம் ஆண்டு ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. மாதந்தோறும் வாடகையாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால், ஒப்பந்தம் முடிவுக்கு வரும். கடந்த 2007ம் ஆண்டு மாத வாடகையைச் செலுத்தாமல், பாரமவுன்ட் நிறுவனம் நிறுத்தியது. பின், அந்தத் தொகையை செலுத்தியது. கடந்த மே மாதம் முதல் மீண்டும் வாடகை பணத்தைச் செலுத்தவில்லை.
இதையடுத்து, குத்தகையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நோட்டீசை கடந்த ஜூலை மாதம் அனுப்பினோம். இரண்டு விமானங்களையும் போர்ச்சுக்கல் நாட்டில் ஒப்படைக்கவும் கூறியிருந்தோம். இதையடுத்து, கடந்த மாதம் ஒரு பகுதி தொகையை பாரமவுன்ட் நிறுவனம் செலுத்தியது. இதுவரை, வாடகை மற்றும் இருப்புத் தொகையாக எங்களுக்கு 12 லட்சத்து 58 ஆயிரத்து 85 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். எனவே, இரண்டு விமானங்களையும் பறிமுதல் செய்து, எங்களிடம் ஒப்படைக்க அட்வகேட் கமிஷனரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய, பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவகாசம் கோரினார். மேலும், வரும் 30ம் தேதிக்குள் இரண்டு மாதத்துக்கான தொகையை செலுத்துவதாகவும் கூறினார். இதை பதிவு செய்து, வரும் 1ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி பால்வசந்தகுமார் தள்ளிவைத்தார். பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் செலுத்தும் பணத்தை, மனுதாரர் பெற்றுக்கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Leave a Reply