இந்திய எல்லையில் சீன ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தவறாக செய்தி வெளியிட்ட இரண்டு செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இவ்விரு செய்தியாளர்களும் முன்னணி செய்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்களாவர்.
இதில் ஒருவர் அசாம் மாநிலம் குவாஹாட்டியைச் சேர்ந்தவர் மற்றொருவர் கோல்கத்தாவைச் சேர்ந்தவர். இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை போலீஸôர் விரைவில் பதிவு செய்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக இவர்களிருவர் மீது இந்திய-திபெத் எல்லை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். செய்தியாளர்கள் இருவரும் தவறான செய்தியை பதிவு செய்ததாகவும், துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் செய்தி வெளியிட்டனர். சிக்கிமில் இம்மாத தொடக்கத்தில் கெராங் எனுமிடத்தில் சீன ராணுவம் துப்பாக்கியால் சுட்டதாகவும் இம்மாத தொடக்கத்தில் இவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
செப்டம்பர் 15-ம் தேதி வெளியான செய்திக்கு இந்திய-திபெத் எல்லை போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் இதுபோன்ற சம்பவமே நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இது தவிர, எல்லையில் சீன ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் செய்தியாளர்கள் வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
சீன ஊடுருவல் செய்தியை மத்திய அரசு பெரிதுபடுத்தவிரும்பவில்லை. அத்துடன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
எல்லையில் சீன ஊடுருவல் அதிகரிக்கவில்லை என்றும் இரு நாடுகளும் எல்லையில் அமைதியை நிலைநாட்டி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Leave a Reply