ஐ.ஐ.டி., விரிவுரையாளர் ஆக பிஎச்.டி., தேவையில்லை

posted in: கல்வி | 0

புதுடில்லி: ஐ.ஐ.டி.,க்களில் விரிவுரையாளராகப் (லெக்சரர்) பணியாற்ற பிஎச்.டி., படிப்புத் தகுதி, இனி தேவையில்லை என்ற முடிவுக்கு, கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விரிவுரையாளர் பணியிடங்களில், பிஎச்.டி., அல்லாதவர்களுக்காக, 10 சதவீதம் ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.,) மட்டுமில்லாமல், மத்திய அரசின் கீழ் இயங்கும், ஐ.ஐ.எம்., மற்றும் ஐ.ஐ.எஸ்சி., ஆகிய உயர்கல்வி நிலையங்களுக்கும், இந்த மாற்றம் பொருந்தும்.

பள்ளி இறுதிப் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள், ஐ.ஐ.டி.,யில் சேர்ந்து படிப்பதை கனவாக வைத்துள்ளனர். ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, ரேங்க்கில் வருவதே மிகவும் அரிதான விஷயம். இதனால் இங்கு விரிவுரையாளர் மற்றும் துணைப் பேராசிரியராக பணியாற்ற பிஎச்.டி., ஆய்வுப் படிப்பு முடித்திருக்க வேண்டும் என்ற கட்டாய விதி, இருந்து வந்தது. இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இந்த விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

முப்பது ஆண்டுகளாக இருந்து வந்த விதியை, அரசு ரத்து செய்திருப்பது கல்வி வல்லுனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘இப்படி மாற்றம் கொண்டு வருவதால், உதவிப் பேராசிரியர் பணியிடங்களிலும் பிஎச்.டி., அல்லாதவர்கள் போட்டி போட நேரும். அப்போது, பிஎச்.டி., தகுதி உள்ளவர்கள் பாதிக்கப்படுவர்’ என, ஆசிரியர்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மூன்று ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே, துணைப் பேராசிரியராக பணியில் சேர முடியும் என்ற விதி உள்ளது. ஆனால், பிஎச்.டி., அல்லாதவர்களும் சேர்க்கப்பட்டால், தகுதி, திறமை வாய்ந்தவர்கள், மேற்படிப்பு படித்து வெளிநாடு செல்ல நேரிடும். அதனால், சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் மீது, தவறான எண்ணம் பரவும். அதனால், ஐ.ஐ.டி.,க்கு மாணவர்கள் சேர்வது குறையும் ஆபத்து உள்ளது’ என்றும், அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

‘முப்பது ஆண்டுகளுக்கு முன், பிஎச்.டி., தகுதி இல்லாதவர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். அப்போது, ஐந்து விண்ணப்பங்கள் வந்தால், அதில் ஒருவர் தான் பிஎச்.டி., பெற்றவராக இருப்பார். அதனால், பிஎச்.டி., அல்லாதவர்களைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இப்போது ஒரு பணியிடத்துக்கே, பிஎச்.டி., தகுதியுள்ள 40 பேர், போட்டி போடுகின்றனர். அப்படியிருக்கும் போது, ஏன் இந்த நடவடிக்கை என்று புரியவில்லை’ என, மூத்த பேராசிரியர்கள் தரப்பில் கண்டனம் வெளிப்பட்டது.

‘ஐ.ஐ.டி., போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதைப் போக்கத்தான் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது’ என, அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐ.ஐ.டி.,க்கு சமமான, வெளிநாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், விரிவுரையாளர் என்ற பணியிடமே, சில ஆண்டுக்கு முன் நீக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *