சென்னை: “கல் வீசிய வக்கீல்கள் பலரின் பெயர்கள் எனக்குத் தெரியும். ஆனால், பெயர்களை வெளியிட விரும்பவில்லை. வக்கீல்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினேன். ஆத்திரமூட்டும் செயல்கள் தொடர்ந்ததால், தடியடி நடத்த வேண்டியதாயிற்று. அப்போது இருந்த பதட்டத்தால், தடியடி நடத்தப்பட்டது’ என, சென்னை மாநகர முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி பதிலளித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் மோதல் நடந்தது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை செய்து வருகிறது. வக்கீல்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஐகோர்ட்டில் வக்கீல் சங்கங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. இதற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டது. நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’, இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி தாக்கல் செய்த பதில் மனு:
ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்து புலனாய்வுத் துறையினர், ஊடகங்கள் வீடியோ எடுத்துள்ளனர். வக்கீல்களையும், கோர்ட் ஊழியர்களையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது அதில் தெரியும். தனிப்பட்ட போலீசாரின் அத்துமீறிய செயல்களை நான் நியாயப்படுத்தவில்லை. சிறிய அளவிலான குரூப் வக்கீல்களை, அமைதியை விரும்பும் பெரும்பாலான வக்கீல்கள் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர். கல் வீசிய வக்கீல்கள் பலரின் பெயர்கள் எனக்குத் தெரியும். போலீசாருக்கு ஆத்திரமூட்டும் வகையில் ஆபாசமாக பேசியவர்கள், சைகை காட்டியவர்களின் பெயர்களையும் கூற முடியும்.
ஆனால், பெயர்களை வெளியிட விரும்பவில்லை. வக்கீல்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினேன். ஆத்திரமூட்டும் செயல்கள் தொடர்ந்ததால், தடியடி நடத்த வேண்டியதாயிற்று. அப்போது இருந்த பதட்டத்தால், தடியடி நடத்தப்பட்டது. அது நியாயமானதா, இல்லையா என்பதை இப்போது துல்லியமாக ஆராய முடியாது. அத்துமீறிய போலீசாரை நான் நியாயப்படுத்தவில்லை. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். தனிப்பட்டவர்களின் அத்துமீறிய செயலுக்கு, நான் பொறுப்பேற்க முடியாது. என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்னை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோருவதில் நியாயமில்லை.
ஐகோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை போலீசார் எரித்ததாகக் கூறுவதில் உண்மையில்லை. போலீஸ் கமிஷனர், கூடுதல் கமிஷனருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரி நான். அவர்கள் இருக்கும்போது, நான் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. அன்று நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். சம்பவம் குறித்து சி.பி.ஐ., மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரத்தேவன் விசாரணையில் உண்மை வெளிவரும். ஐகோர்ட் கதவை நான் மூடியதாகக் கூறுவதும் தவறு. சி.பி.ஐ., விசாரணைக்குப் பின் தான், வக்கீல்களை சரணடையச் செய்ய திட்டமிட்ட சக்தி மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னையை தூண்டிவிட்டது யார் என்பது தெரியவரும். அதுவரை யாரையும் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டுவது கடினம். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply