கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 1100 பேருக்கு ஆபரேஷன்

posted in: அரசியல் | 0

தமிழக அரசு அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 1100 பேருக்கு உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏழை, எளிய விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனியார் மருத்துவமனையில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம் கடந்த 23-7-2009 அன்று தொடங்கப்பட்டது.

இருதய ஆபரேஷன், சிறுநீரக மாற்று ஆபரேஷன், நுரையீரல், எலும்பு முறிவு, பக்கவாதம், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நோய்களுக்கு இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர்சிகிச்சை பெறலாம்.

இதற்கான மருத்துவ செலவை அரசு ஏற்கிறது. இந்த மருத்துவ காப்பீட்டு பணியை ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது. ஒரு கோடி பேருக்கு இந்த இலவச காப்பீட்டு திட்டம் அரசால் அளிக்கப்படுகிறது.

மக்களிடையே இந்தத் திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இத்திட்டம் கிராமப்புற மக்களை பெருமளவில் சென்றைய வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கி ஒரு மாதம் முடிந்துள்ளது. இந்த ஒரு மாதத்தில் 1100 பேருக்கு இத்திட்டம் மூலம் பலன் கிடைத்துல்ளதாக திட்ட அதிகாரி விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஏழை-எளிய மக்கள் [^] சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழக்கக்கூடிய நிலை இருந்ததை முதல்-அமைச்சர் கருணாநிதி மாற்றி உயிர் காக்கும் உயர்ந்த சிகிச்சையை இலவசமாக அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1100 பேர் இலவசமாக பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

இருதயம், சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்து பயன் அடைந்துள்ளனர். இதற்காக ரூ. 5.3 கோடி மருத்துவ செலவை அரசு வழங்கியுள்ளது.

இத்திட்டத்தில் பயன் அடைய கூடியவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களுக்கு அவர்களது கையெழுத்துடன் கூடிய புகைப்படம் அடங்கிய அடையாள அட்டை இன்னும் 10 நாளில் வழங்கப்படும்.

தமிழ்நாடு [^] முழுவதும் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *