சென்னை: “கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, கூடுதலாக தொழில்நுட்ப படிப்பு வழங்கும் திட்டம் துவக்கப்படும்,” என, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கூட்டம் நேற்று நடந்தது. அதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
இத்திட்டத்தின்படி, விருப்பமுள்ள கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஆறு மாத சான்றிதழ் படிப்போ அல்லது ஒரு வருட பட்டயப் படிப்போ கூடுதலாக படிக்க முடியும். முதற்கட்டமாக இத்திட்டம் 14 அரசு, 10 அரசு உதவிபெறும், 29 தனியார் என மொத்தம் 53 பாலிடெக்னிக் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும். அக்டோபர் 1ம் தேதி முதல் இத்திட்டம் துவக்கப்படும்.
கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்கல்வி படிப்பை கட்டாயமாக்குவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும். ஓர் ஆண்டு படிப்பில் 192 மணி நேரமும், ஆறு மாத படிப்பில் 96 மணி நேரமும் படிக்க வேண்டும். ஓர் ஆண்டு படிப்பிற்கு 3,000 ரூபாய், ஆறு மாதப் படிப்பிற்கு 1,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். வாரத்தில் நான்கு மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும்.
பொறியியல் கல்லூரிகளின் தரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றன. தரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஏ.ஐ.சி.டி.இ., அண்ணா பல்கலை, அரசு அனைவருக்கும் உள்ளது. மாணவர்கள் கல்லூரியை தேடிய நிலை மாறி, தற்போது கல்லூரிகள் மாணவர்களை பிடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் போட்டியால் கல்லூரிகள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றன. எதிர்காலத்தில் கட்டணம் குறையவும் வாய்ப்புள்ளது.
கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ் ணன் மீது கோர்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ மீது அரசே நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பொன்முடி கூறினார்.
இக்கூட்டத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முதன்மைச் செயலர் கணேசன், தொழில்நுட்பக் கல்வி கமிஷனர் ஜெயக்கொடி, கல்லூரிக் கல்வி இயக்குனர் நளினி ரவீந்திரன், மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply