‘நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் ‘கிரேடு’ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என’, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வை விருப்பப்பட்டால் எழுதலாம் என மத்திய கல்வி ஆலோசனை வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில், வரும் கல்வியாண்டு முதல் இத்திட்டத்தை பள்ளிகளில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பில் தேர்வு தேவையா, அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும் வகையில் முழு அளவிலான சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன்மூலம், மாணவர்கள் அவர்களது விருப்பமின்றி, அவர்கள் மீது கல்வி திணிக்கப்படுவது தடுக்கப்படும். ‘உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிக்காக தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’ என, யஷ்பால் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை மத்திய அரசு பரீசிலித்து வருகிறது. அதன் அடிப்படையில், இதை பள்ளிகளில் செயல்படுத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அறிவியல் மற்றும் கணித பாடத்திட்டங்கள் அடுத்த இரண்டு மாதங்களில் தயாராகிவிடும். பல்கலைக்கழகங்களுக்கு முழுமையான தன்னாட்சி வழங்கவே அரசு விரும்புகிறது. அதே சமயம், நாடு முழுவதும் கல்வித் திட்டத்திற்கு ஒரே போர்டு வராது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
Leave a Reply