சேலம்: சேலத்திலிருந்து சென்னைக்கு அக்., 25ம் தேதி முதல், விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் துவக்க உள்ளது. சேலம் காமலாபுரத்தில், 1994ம் ஆண்டு, விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
துவக்கத்தில், என்.இ.பி.சி., நிறுவனத்தால், 50 பேர் கொண்ட சிறிய ரக விமானம் இயக்கப்பட்டது. சேலத்திலிருந்து கோவை வழியாக சென்னை சென்ற அந்த விமானத்துக்கு போதிய வரவேற்பு இல்லாததால், துவக்கப்பட்ட 45 நாட்களுக்குள் விமான சேவை நிறுத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பின், 2006ல் ஏர்டெக்கான் நிறுவனம், மீண்டும், சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவையை துவங்க முன்வந்தது. ஆனால், போதிய வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் திட்டத்திலிருந்து பின் வாங்கியது.
கடந்த ஜூலை 27ம் தேதி கிங்பிஷர் நிறுவன உயரதிகாரிகள், சேலம் மாவட்ட தொழிலதிபர், கல்வி நிறுவனர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினர். சேலத்திலிருந்து சென்னைக்கு அக்., 25ம் தேதி முதல் விமான சேவையை துவக்குவதாக கிங்பிஷர் நிறுவனம் அறிவித்தது. வரும் அக்., 25ம் தேதி முதல், 66 சீட்கள் கொண்ட பயணிகள் விமானம் மாலை 2.45 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி 3.45க்கு சேலம் வரும். சேலத்திலிருந்து மாலை 4.20க்கு கிளம்பி, 5.20 மணிக்கு சென்னை செல்லும்.
Leave a Reply