தியாகிகளின் பேரக்குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை: மருத்துவ படிப்புகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரக்குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த நிரஞ்சனா, புதுக்கோட்டை ஜான்சிராணி தாக்கல் செய்த ரிட் மனு: நாங்கள் சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரக்குழந்தைகள்.

தமிழக அரசு 2004 மே 28ல் பிறப்பித்த உத்தரவு ஒன்றில் தியாகிகளின் குழந்தைகளுக்கு (மகன், மகள்) மட்டும் தான் மருத்துவ கல்லூரி, பல் மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிட்டது. அதனடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப குறிப்பேட்டில், “”தியாகிகளின் குழந்தைகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு. மற்றவர்களுக்கு கிடையாது,” என கூறப்பட்டுள்ளது. அதை ரத்து செய்து எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், “”தியாகிகளின் பேரக்குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு முறையில் 2003-2004 வரை சீட் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மூன்று பேர் கொண்ட முழு பெஞ்ச், உயர்கல்வியில் பல்வேறு இடஒதுக்கீடு தொடர்பாக கூறிய தீர்ப்பின் அடிப்படையில், “”தியாகிகளின் குழந்தைகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு. மற்றவர்களுக்கு கிடையாது,” என 2004ல் அரசு உத்தரவிட்டுள்ளது. தியாகிகளின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு என உத்தரவிட்டதன் நோக்கம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகி விட்டன.

அப்படியுள்ள போது குழந்தைகளை மட்டுமே மனதில் வைத்து அரசு இந்த உத்தரவிட்டுள்ளது. முன்னோர் பட்ட கஷ்டங்களை அங்கீகரிக்கும் வகையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை சுப்ரீம் கோர்ட் பல தீர்ப்புகளில் சுட்டி காட்டியுள்ளது. 2002-2003ல் அரசு பிறப்பித்த உத்தரவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குழந்தைகளை இடஒதுக்கீட்டில் சேர்க்கும் போது ஆழ்ந்த யோசனை செய்துள்ளது. அவர்களின் நோக்கமே வாரிசுதாரர்களுக்கு இந்த பயன் கிடைக்க வேண்டும் என்பது தான். இதை தோற்கடிக்கும் நோக்கத்தில் தியாகிகளின் குழந்தைகளுக்கு மட்டுமே எனக்கூறி மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் இருப்பது சட்டப்படி சரியல்ல. மனுதாரர்கள் இடஒதுக்கீடு கேட்பது நியாயம். அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,” என உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *