புதுடில்லி : “சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தகவல் பெறும் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டவரே. இந்தச் சட்டத்தின் கீழ், நீதிபதிகளின் சொத்து விவரங்களை வெளியிட முடியும்’ என்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை டில்லி ஐகோர்ட் வழங்கியுள்ளது.
“சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்’ என்ற கோரிக்கை, சமீப நாட்களாக எழுந்துள்ளது. இதற்கு ஆதரவாக ஐகோர்ட் நீதிபதிகள் சிலர் குரல் கொடுத்தனர். பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தன் சொத்து விவரங்களை வெளியிட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட சம்மதம் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் இணைய தளத்தில், சொத்து விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், “சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும் தகவல் பெறும் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டவரே. அதனால், அந்தச் சட்டப்படி நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட முடியும்’ என, டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சொத்து விவரத்தைக் கூட தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்டுப் பெறலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.டில்லியைச் சேர்ந்த சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் உரிமைச் சட்டப்படி, மத்திய தகவல் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,”சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் எத்தனை பேர் தங்கள் சொத்து விவரங்களைத் தந்துள்ளனர். அது, சுப்ரீம் கோர்ட் ரிஜிஸ்திரார் ஆவணத்தில் பதிவாகியிருக்கிறதா’ என்று கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்தார்.
இதைப் பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம், “தகவல் உரிமைச் சட்டப்படி நீதிபதிகளின் சொத்து விவரங்களைத் தர வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட்டிற்கு உத்தரவிட்டது.ஆனால், சுப்ரீம் கோர்ட் இதை மறுத்தது. “நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடுவது கட்டாயம் என, எந்தச் சட்டமும் தெரிவிக்கவில்லை’ என பதிலளித்தது. அத்துடன், மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் சுப்ரீம் கோர்ட் சார்பில் மனு தாக்கல் ஆனது. அதை ஒட்டி இந்த வழக்கு மே 4ம் தேதி விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை வக்கீல் வாகன்வதி ஆஜராகி, “இந்த விஷயத்தில் ஒளிவு மறைவற்ற நிலையை ஏற்படுத்தினால், அது நீதித் துறையின் தனித்தன்மையைப் பாதிக்கும்’ என்று தெரிவித்தார். அப்போது, இந்த வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது இந்த தீர்ப்பை அறிவித்த நீதிபதி ரவீந்திர பட் கூறியதாவது:தகவல் உரிமைச் சட்டப்படி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகம் ஒரு பொது அமைப்பு. அதனால், இந்தச் சட்ட விதிமுறைகள் அதற்கும் பொருந்தும். மேலும், இந்தச் சட்டம் பிரிவு 2 (1)ன் கீழ், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவிக்கும் சொத்து விவரங்கள் தகவல்களே. தலைமை நீதிபதியிடம் அவர்கள் தெரிவிக்கும் சொத்து விவரங்களை வெளியிடலாம். இருப்பினும், நீதிபதிகளின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடத் தேவையில்லை.தற்போதை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தலைமை நீதிபதியிடம் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளனரா, இல்லையா என்பதை கோர்ட்டின் பதிவாளர் அலுவலகம் நான்கு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.
சுதந்திரத்திற்குப் பின் இயற்றப்பட்ட சட்டங் களில், தகவல் உரிமைச் சட்டம் மிகவும் முக்கியமானது. ஜனநாயகம் சிறப்பான முறையில் செயல் படுவதற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதை உண்மையான உணர்வுடன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியம்.அரசின் செயல்பாடுகளில் வெளிச்சத்திற்கு வராத விஷயங்களை வெளிக்கொணரவும், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர் புடைய பொது அமைப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் தகவல் உரிமைச் சட்டம் உதவுகிறது. இதற்கு முன், இது போன்ற வசதி மக்களுக்கு கிடைக்கவில்லை.நீதித்துறை உட்பட அனைத்து அதிகார அமைப் புகளும், அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டவையே. அந்த அமைப்புகளின் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும், நிர்ணயிக்கப் பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் தான் நடக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டானது நீதித்துறையின் அல்லது நீதித்துறை என்ற குடும்பத்தின் தலைவராக உள்ளது. தலைமை நீதிபதி அலுவலகம் ஒரு பொது அமைப்பு என தெரிவித்ததன் மூலம், மத்திய தகவல் ஆணையம் எந்தத் தவறையும் செய்யவில்லை. தகவல் உரிமைச் சட்டப்படி, தலைமை நீதிபதியிடம் நீதிபதிகள் தெரிவிக்கும் சொத்து விவரங்கள் தகவல்களே. அதனால், நீதிபதிகள் தங்களின் சொத்து விவரங்களைத் தெரிவிக்க, பார்லிமென்டில் தனியாக சட்டம் இயற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Leave a Reply