நீர்மூழ்கிகளுக்கான சுரங்கப் பாதையைக் கட்டியமைக்க ஜப்பான் விபுணர்கள் குழு புலிகளுக்கு உதவியது: கொழும்பு நாளேடு

posted in: உலகம் | 0

marin_ltte2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய நிபுணர்களின் குழு ஒன்றே நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான சுரங்கப்பாதை ஒன்றைக் கட்டியமைப்பதற்கான உதவிகளைச் செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பகுதியான புதுக்குடியிருப்பில் செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக ஜப்பானிய தூதுக்குழுவினர் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில் ஜப்பானிய ஆதரவுடன் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை சிறிலங்காவின் 58 ஆவது படை அணியினரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘ஐலன்ட்’ நாளேடு தெரிவித்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை 360 அடி நீளமானதாகவும், 25 அடி அகலமானதாகவும் இருந்தது. இதன் முன்பகுதி 300 அடி நீளமானதாகவும் 30 அடி அகலமானதாகவும் காணப்பட்டதுடன், இதனை அமைக்கும் பணியில் ஜப்பானியர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பது அண்மையில்தான் கண்டறியப்பட்டதாகவும் படை வட்டாரங்களை ஆதாரம் காட்டி ‘ஐலன்ட்’ நாளேடு இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இது தொடர்பாக ‘ஐலன்ட்’ செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“விடுதலைப் புலிகளின் தலைமையை சிறிலங்காப் படையினர் முழுமையாக அழிப்பதற்கு மூன்று வார காலத்துக்கு முன்னர் இரட்டைவாய்க்கால் பகுதியில் இந்தச் சுரங்கப் பாதையைக் கைப்பற்றினார்கள். இந்தப் பகுதியில் இருந்து கடலுக்குத் மறைந்து செல்வதற்கு இந்தப் பாதையைப் பயன்படுத்துவதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்தார்கள். அதேபோல கடற்பகுதியில் இருந்தும் இந்தப் பகுதிக்கு மறைந்துவர முடியும்.

ஆழிப்பேரலை தாக்கிய பின்னர் அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசு பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நீர்மூழ்கிக் கப்பல்களைச் செய்வதற்கு ஜப்பானியர்கள் தமக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இருந்தபோதிலும் இதன் முதலாவது பரீட்சார்த்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் தரித்து நிற்கும் துருக்கியக் கப்பலான ‘ஃபரா 3’ க்கு அண்மையில் புலிகளின் இந்த நீர்மூழ்கிக் கப்பலை சுழியோடிகள் பின்னர் கண்டுபிடித்தார்கள்.

இந்தப் பணிக்குத் தேவையாக இருந்த பல்வேறு பொருட்களையும் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் இருந்து கடத்திக்கொண்டு வந்தார்கள்.

விடுதலைப் புலிகளிடம் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வெளி இணைப்பு இயந்திரங்கள், கதூவீகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உட்பட பல பொருட்கள் இருந்தன. வன்னி கிழக்குப் பகுதியில் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவை கைப்பற்றப்பட்டன.

ஜப்பானில் வசித்துவந்த ஈழத் தமிழர் ஒருவரும் இந்த நிபுணர்களுடன் இணைந்து பணி புரிந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மீண்டும் போர் தொடங்குவதற்கு முன்னதாகவே அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

வன்னிப் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்கள் தம்மைப் பலப்படுத்திக்கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து பல நிபுணர்களை தமது பகுதிக்கு வரவழைத்திருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *