ஜிந்த்(அரியானா):”அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவில்லை; பணக்காரர்களுக்காக ஆட்சி நடக்கிறது;’ என்று காங்., ஆட்சியை மாயாவதி கடுமையாக தாக்கியுள்ளார்.அரியானா மாநிலத்தில் அக்., 13ல் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, தனது கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிரசாரம் செய்வதற்காக, மாயாவதி அங்கு சென்றார்.
ஹூடா மைதானத்தில் நடந்த பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு விலையைக் கட்டுப்படுத்த காங்., அரசு தவறிவிட்டது. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் நிம்மதியைக் குலைத்து விட்டது. ஊழலைக் கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டது. இந்த நாட்டை வறுமை படுகுழியில் தள்ளிவிட்டது
காங்., அரசு. நாடு விடுதலையடைந்து 62 ஆண்டுகள் ஆன பின்னும் கூட, ஏழைகள் வாழ்வில் மலர்ச்சியில்லை. தேர்தல் நேரத்தில் ஏழைகளுக்காக பாடுபடுவதாகக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் பணக்காரர்களுக்காக செயல்படுகிறது. ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர்; பணக்காரர்கள் பணக்காரர்களாகவே ஆகி வருகின்றனர். அரியானாவில் காங்., நடத்தி வரும் குண்டர்கள் ராஜ்யத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.
தேர்தல் முடிவுக்கு பின், முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம். அரியானா ஜன்ஹித் காங்., ஒரு மதவாதக் கட்சி. அதனுடன் கூட்டணி அமைக்க நாங்கள் விரும்ப வில்லை. அக்கட்சியின் தலைவர் குல்தீப் பிஷ்னோய் ஒரு சுயநலவாதி.இவ்வாறு மாயாவதி பேசினார்.அரியானாவில் 90 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
Leave a Reply