பெங்களூரு: யோகா பயிற்சியை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,)பரிந்துரைத்துள்ளது.
மன அழுத்தம் போக்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும் யோகா அவசியமாக உள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவையும் இப்போதுள்ள இளைய தலைமுறையினரிடம் எட்டிப்பார்ப்பதால், யோகா பயிற்சியைப் பள்ளியில் பாடமாக வைக்க வேண்டும் என்று, மத்திய அரசின் பள்ளிப் பாடத் திட்ட ஆய்வுக் குழு 2005ல் பரிந்துரை செய்தது.
யோகா, 1988ம் ஆண்டு முதல் சில மாநிலங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி பாடத்தின் ஒரு பிரிவாக இருந்தது. ஆனால், கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று எந்தப் பள்ளியையும் அரசு வலியுறுத்தவில்லை. கர்நாடகாவில் பெரும்பாலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் யோகாசனம் கற்றுத் தருகின்றனர். இருந்த போதிலும் யோகாவிற்கென தனியான பாடத்திட்டமோ, ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், யோகாவைப் பாடமாக வைத்து, அதற்கு தனி ஆசிரியர் வைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி., ஒருங்கிணைப்பாளர் சரோஜ் யாதவ் கூறுகையில்,‘ஆறாம் வகுப்பில் இருந்து யோகாவை சேர்க்கலாம்; அதற்கு அரசு அனுமதி அளிக்கும்’ என்று தெரிவித்தார். யோகா பற்றிய பாடப் புத்தகம் தயாரிப்பது தொடர்பாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
Leave a Reply