சென்னை: இனிமேல் டிரைவர், கண்டக்டருக்குப் பிடித்த படத்தை (நமக்குப் பிடித்துத் தொலைக்காத) பார்த்தாக வேண்டிய கட்டாயமில்லை. அதற்குப் பதில் சாட்டிலைட் மூலமாக பஸ்களில் திரைப்படங்களை ஒளிபரப்பப் போகிறார்கள்.
தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்கள், மற்றும் சொகுசு பஸ்களில் சினிமா படங்கள், மற்றும் நிகழ்ச்சிகள் இதற்கு முன்பு வீடியோ டெக் மூலமாகவும், பின்னர் சி.டி. மூலமும் ஒளிபரப்பப்பட்டன.
ஆனால் டிரைவர்களும், கண்டக்டர்களும் தங்களுக்குப் பிடித்த படத்தையே காட்டி வந்தனர். இதைத்தான் பயணிகளும் பார்த்தாக வேண்டியிருந்தது.
இதனால் நமக்குப் பிடிக்காத படமாக இருந்தாலும் அதைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. பார்க்க விரும்பாவிட்டாலும் அது போடும் அலறல் நமது காதுகளைப் பதம் பார்த்து வந்ததைத் தவிர்க்க முடியாதாக இருந்தது.
ஆனால் தற்போது இதில் மாற்றம் வருகிறது. இனி செயற்கைக் கோள் மூலம் பஸ்களில் சினிமா படங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக காண முடியும்.
சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து பரீட்சார்த்தமாக 250 பஸ்களில் செயற்கைக் கோள் மூலம் படங்கள் மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்த மாதம் முதல் 10,000 பஸ்களில் இந்த வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக பஸ்களில் எல்.சி.டி. டி.வி.களும் பொருத்தப்படுகின்றன. சினிமா படங்கள் மட்டுமில்லாமல் முக்கியமான பொது அறிவிப்புகள், சம்பவங்களையும் அவ்வப்போது பயணிகளுக்கு தெரிவிக்க இதன் மூலம் வசதி செய்யப்படுகிறது.
சென்னை மாநகர பஸ்கள் தவிர மற்ற ஊர் விரைவு பஸ்கள், பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்கள் என 6 கோட்டங்களிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்தப் போகிறார்களாம்.
Leave a Reply