புதுடில்லி: பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான சாக்சார் பாரத் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்பணித்தார்.
சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு டில்லியில் நடைபெற்ற விழாவில் சாக்சார் பாரத் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.
ரூ.65.92 மில்லியன் செலவில் இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 50 மில்லியன் நிதியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள தொகையை மாநில அரசு செலவிடும்.
நமது நாட்டில் 300 மில்லியன் இந்தியர்கள் எழுத்தறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பாதியளவு பெண்கள் எழுதவோ படிக்கவோ தெரியாமல் உள்ளனர். இந்த நிலைமையை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாற்ற வேண்டும். தற்போதைய நிலையைத் தொடர அனுமதிக்கக்கூடாது என்று மன்மோகன்சிங் இந்த விழாவில் பேசும்போது தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு பெண்ணும் எழுத்தறிவைப் பெறும் வகையில் நமது தேசிய எழுத்தறிவுத் திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும் என் குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டார். மக்களுக்கு அளித்த உறுதிமொழியின் முதல் படியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அனைவருக்கும் தரமான நல்ல கல்வி அளிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்கான திட்டங்களுக்கு நிதி ஒரு தடையாக இருக்காது என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது பற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக அனைத்துக் குழந்தைகளையும் எட்டும் வகையில் தொடக்கக் கல்வி உள்ளது. தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அத்துடன் படிப்பை இடையிலேயே விட்டு விடுவதும் குறைந்துள்ளது என்றார்.
Leave a Reply