பொக்ரான்-2 அணுகுண்டு சோதனை குறித்து விசாரணை வேண்டும்: விஞ்ஞானி சந்தானம்

posted in: மற்றவை | 0

bomb_pokhranகடந்த 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை எந்த அளவுக்கு வெற்றி அடைந்தது என்பது குறித்து நடுநிலைக் குழு மூலம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) முன்னாள் விஞ்ஞானி கே. சந்தானம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:

கற்பனையில் அணுசக்தி வல்லரசை உருவாக்க முடியாது. ஒரு சோதனையில் இரு வேறு கருத்துகள் உருவானால் அது குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழுவை உருவாக்க வேண்டும். இதுவே வழக்கமான அறிவியல் நடைமுறை.

வறட்டு கெüரவத்தால் நாம் ஏமாறக்கூடாது. கெüரவம் என்பது அசைக்கமுடியாத உண்மைகள் மூலமும், விஞ்ஞானிகள் மூலமும் நடத்தப்படும் பாரபட்சமில்லாத விசாரணைகள் மூலமுமே உறுதிப்படுத்தப்பட வேண்டும். வீண் கற்பனைகளை நாம் உருவாக்கிக்கொள்ளக்கூடாது என்றார் சந்தானம்.

பொக்ரான்-2 அணுகுண்டு சோதனை குறித்து ஆராய அமைக்கப்படும் நிபுணர்கள் குழு தனது சொந்த சட்ட திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம். அக்குழுவிடம் ரகசிய ஆவணங்கள் அளிக்கப்பட்டால், அவற்றை ஆராய்ந்து ஒரு ரகசிய அறிக்கையை அரசிடமே குழு அளிக்கலாம். ரகசியமில்லாத தகவல்கள் குறித்த விவரங்களை பத்திரிகைகளுக்கு அக்குழு வழங்கலாம் என்றார் சந்தானம்.

1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொக்ரான்-2 அணுகுண்டு சோதனை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அணுசக்தி விஞ்ஞானிகள் எம்.ஆர். சீனிவாசன், பி.கே. அய்யங்கார், ஏ.என். பிரசாத் ஆகியோர் சில தினங்களுக்கு முன் தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் சந்தானம் மேற்கண்ட விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னர் சந்தானம் கூறியதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. பொக்ரான் அணுகுண்டு-2 சோதனை குறித்து தவறான எண்ணத்தை சில விஞ்ஞானிகள் உருவாக்குகின்றனர். இது தேவையற்றது என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர்-ஜெனரலாக அப்துல் கலாம் இருந்த போது இந்த சோதனை நடைபெற்றது. சோதனை முழு வெற்றியடைந்ததாக அப்துல் கலாம் கூறினார்.

1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து இந்தியா சோதனை செய்தது. அதே ஆண்டு மே 13-ம் தேதி இரு சிறிய குண்டுகளை வெடித்து சோதனை செய்யப்பட்டது.

இச் சோதனைகளில் அப்துல் கலாம், இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் ஆர். சிதம்பரம், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய இயக்குநர் அனில் ககோட்கர் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர்.

தற்போது விஞ்ஞானி சந்தானம் கூறிய கருத்து விஞ்ஞானிகளிடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *