போலீஸ் படையை நவீனப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
போலீஸ் ஐ.ஜி.க்கள் மற்றும் டைரக்டர் ஜெனரல்கள் மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 145 போலீஸôர் என்ற விகிதம் போதுமானதாக இல்லை. போலீஸ் படையை வலுப்படுத்த முதலில் போலீஸôரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதன் முதல் கட்டமாக காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
நவீன கால போலீûஸ உருவாக்குவது அவசியமாகிறது. காவல் பணியில் தேர்ந்த பயிற்சி, நவீன தொழில்நுட்பப் பயிற்சி, எடுத்த பணியை திறம்பட முடிப்பதற்கான ஊக்குவிப்பு, கூடுதல் அதிகாரம் ஆகியவற்றை ஒருங்கே பெற்ற போலீஸ் வீரரே நவீனகால போலீஸôக இருக்க முடியும்.
போலீஸ் திறனை அதிகரிப்பது அவசியம். அது காவல் நிலையத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையமும் தன்னிறைவு பெற்றதாக இருக்க வேண்டும். நவீன ஆயுதங்கள், வன்முறை – கலவரத்தை ஒடுக்குவதற்கு தேவையான கட்டமைப்புகள், கிரிமினல்களின் விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கம்ப்யூட்டர் இணைப்பு என பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டதாக காவல் நிலையம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பெரு நகரத்திலும் நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட வேண்டும். டிஜிட்டல் முறையிலான வரைபடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கு இடம் பெற வேண்டும்.
போலீஸ்காரர்களுக்கு மறு பயிற்சி அவசியம். ஒரு போலீஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மறு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிகிறது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும்.
தேசிய போலீஸ் பல்கலைக்கழகம்: போலீஸôரின் திறமையை மேம்படுத்த தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். மேலும் சட்டம், ஒழுங்குப் பிரச்னைகளுக்கான தேசிய நிறுவனமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஊடுருவல் அதிகரிப்பு: எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதி மட்டுமின்றி வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட எல்லைகள் வழியாகவும் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளுடனான மோதல் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது. காஷ்மீரில் அமைதி சீர்குலைந்துள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை நாம் அனுமதிக்கக் கூடாது.
நக்ஸல் பிரச்னை: நக்ஸலைட்டுகளின் வன்முறைச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது உள்நாட்டு பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அவர்களை ஒடுக்குவதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. நக்ஸல் பிரச்னையை சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னையாக கருதக் கூடாது. அவர்களை ஒடுக்க தனி உத்தி வகுக்கப்பட வேண்டும்.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. குறிப்பாக அசாம் மற்றும் மணிப்பூரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. உரிய பாதுகாப்பு உத்திகளை முறையாக கடைப்பிடித்தால் அங்கு நிலைமை மேம்படும் என்று நம்புகிறேன் என்றார் மன்மோகன்.
Leave a Reply