மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பமா?; அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்

posted in: உலகம் | 0

makinta12ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தனது முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக, பிரதான உரையை நிகழ்த்தவிருந்த ஜனாதிபதி சிகிச்சைக்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முன்னதாக சம்பிரதாய முறைப்படி குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, தனது ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்த போது, அவரது ஆசனம் பின்பக்கமாக சரிந்துள்ளது. உடனடியாக கீழே விழுந்த ஜனாதிபதியை தூக்கிய அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வேறு ஒரு ஆசனத்தில் அமரச் செய்துள்ளனர்.

இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களிடம் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர், ஜனாதிபதி விழுந்த காட்சிகளை கத்தரிக்குமாறு கூறியுள்ளனர்.

சில தொலைக்காட்சிகளின் வீடியோ நாடாக்களை கைப்பற்றிய ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர், நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ நாடா அனைவருக்கும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

கலாசார அமைச்சின் செயலாளரினால் நடத்தப்பட்ட நன்றியுரையின் பின்னர், சிலருக்கு விருதுகளை வழங்கிய ஜனாதிபதி, உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜோதிடர் ஒருவர், ஜனாதிபதி தனது ஆசனத்தில் இருந்து விழுந்தமையானது அவரது வீழ்ச்சியை குறிப்பதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *