ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து – சென்னை ஏடிசியின் அலட்சியமே காரணம்?

posted in: மற்றவை | 0

09-chennai-atc-200சென்னை: ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் தடம் மாறியதைத் தொடர்ந்து, தங்களுக்கு வழி காட்டுமாறு அந்த ஹெலிகாப்டரின் விமானிகள் தொடர்ந்து சென்னை விமானக் கட்டுப்பாட்டு மையத்தைத் (ஏடிசி) தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் சென்னை ஏடிசியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்த முதல் கட்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹெலிகாப்டரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டியில் (காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்) பதிவாகியுள்ள விமானிகளின் குரல்களிலிருந்து இது தெரிய வந்துள்ளதாம்.

தாங்கள் வழி மாறிப் போய் விட்டதாகவும், சரியான பாதைக்குத் திரும்ப வழி காட்டுமாறும் பலமுறை விமானிகள், சென்னை ஏடிசியைத் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். ஆனால் சென்னையிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம்.

மேலும், சென்னை ஏடிசிக்கும், ஹெலிகாப்டருக்கும் இடையிலான தொடர்புகள் காலை 9.12 மணிக்கு நின்று போய் விட்டது. அதன் பிறகுதான் ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சென்னை ஏடிசியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் நுழைந்துள்ளது. 9.02 மணிக்கு சென்னை ஏடிசியுடன் ஹெலிகாப்டருக்குத் தொடர்பு கிடைத்துள்ளது. ஆனால் 9.30 மணிக்குத் திரும்ப பேசுமாறு சென்னை ஏடிசியிலிருந்து பைலட்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மோசமான வானிலையில் சிக்கியுள்ளது ஹெலிகாப்டர்.

ரெட்டி உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டர் கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் தொலைவுக்கு வழி மாறிப் போயுள்ளது. அதன் பின்னர்தான் மலையில் மோதி அது வெடித்துச் சிதறியுள்ளது.

சென்னை ஏடிசியின் போக்கு விசாரணை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ள அதே நேரத்தில் காலை 9.12 மணி முதல் 9.30 மணி வரை இரு தரப்புக்கும் இடையே எந்தவிதத் தகவல் தொடர்பும் இல்லாமல் போனதும் அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த 18 நிமிடங்களுக்குள் என்ன நடந்தது என்பதைத்தான் தற்போது அதிகாரிகள் முக்கிமயாக விசாரிக்கவுள்ளனர்.

கருப்புப் பெட்டி உள்ளிட்டவை டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

கருப்புப் பெட்டியில் பதிவாகியுள்ள பிற தகவல்களை வைத்துத்தான் என்ன நடந்தது என்ற அனுமானத்திற்கு வர முடியும்.

இதுதவிர விபத்து நடந்த இடத்திலிருந்து ராஜசேகர ரெட்டியின் மொபைல் போன் உள்பட 3 போன்கள் சிக்கியுள்ளன. அதில் இரண்டு போன்கள் உடைந்து சிதறி விட்டன. ஒரு போன் மட்டும் பத்திரமாக கிடைத்துள்ளது. அதில் கடைசி நேரத்தில் யாரையாவது தொடர்பு கொண்டனரா என்பதை அறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *