வன்னி முகாம்-10000 தமிழர்கள் விடுதலை!

posted in: உலகம் | 0

12-vavuniya-camp-200வன்னி: மெனிக் பாம் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்படிருந்த 3 லட்சம் தமிழர்களில் 10000 பேரை மட்டும் இலங்கை ராணுவம் நேற்று விடுவித்துள்ளது.

இவர்களில் 74 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விடுவிக்கப்பட்ட அனைவரும் அரசு போக்குவரத்து வாகனங்களில் அவரவர் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தங்கள் இடத்துக்கு திரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னிப் போரின் இறுதி நாட்களில் கடும் துன்பங்களை அனுபவித்த 3 லட்சம் மக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த பின்னர் கடந்த ஐந்து மாதங்களாக வசதிகள் ஏதுமற்ற முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் ஏதுமற்ற வன்னி தடுப்பு முகாம்கள் சிறைக் கூடங்களாகவே விளங்குகின்றன என அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களையும் உடனடியாக மீளக்குடியமர்த்தும்படி இலங்கை அரசுக்கு மேற்குலக நாடுகள் கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.

இந்த வருட இறுதிக்குள், அதாவது 180 நாட்களுக்குள் முகாமில் இருக்கும் 80 சதவிகித மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டு விடுவர் என அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபைக்கு உறுதி அளித்திருந்தார்.

எனினும், அவர் வாக்குறுதி வழங்கி 100 நாட்கள் கடந்துவிட்ட போதும் இதுவரை 29 ஆயிரத்து 280 தமிழர்கள் மட்டுமே இதுவரை மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை குடியமர்த்தும் பணிகள் மிக மிக தாமதமாகவே நடைபெற்று வருகின்றன எனக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

பருவ மழை காலம் தொடங்கினால் முகாம்களின் நிலை மேலும் மோசமாகும் என ஐ.நா. உட்பட அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

இதனை அடுத்து, முகாம்களில் உள்ளவர்கள் வெளியில் சென்று தங்குவதற்கு வசதிகள் இருப்பின் அவர்கள் விடுவிக்கப்படுவர் என அரசு அறிவித்துள்ளது.

முகாம்களில் உள்ளவர்களைப் பொறுப்பெடுக்க விரும்பும் வெளியில் உள்ள உறவினர்கள் அரசிடம் விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முறையின் கீழ் பொறுப்பேற்பதற்குத் தயாராக இருக்கும் உறவினர்கள்தான் விண்ணபிக்க முடியுமே தவிர முகாம்களில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *