இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.
இலங்கைத் தமிழர்கள் விவகாரம், கடந்த இரு வாரங்களாக தலைநகர் டில்லியை சூடேற்றி வருகிறது. இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மீண்டும் அவரவர் இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரைச் சந்தித்து முறையிட்டனர்.பார்லிமென்ட் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்போது வலியுறுத்தியும், இந்த கோரிக்கை குறித்து இதுவரை, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மேலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், இந்தக் குழு வலியுறுத்தியது. ஆனால், இந்த சந்திப்புக்கு பிறகு தான், தமிழக மீனவர்கள் மீது மேலும் தாக்குதல்கள் அதிகமாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.
மீனவர்கள் பிரச்னையை முன்னிறுத்தி, விஜய்காந்த்தின் உண்ணா விரதம் இன்று டில்லியில் நடைபெறுகிறது. டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், காலை 9 மணிக்குத் துவங்கி மாலை வரை நடக்க உள்ள இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் பங்கேற்க, விஜய்காந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் டில்லி வந்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை மற்றவர்கள் எல்லாம் கையில் எடுத்த நிலையில், சற்று மாற்றமாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை, விஜய்காந்த் கையில் எடுத்து டில்லியில் உண்ணாவிரதம் இருக்கவுள்ளார்.குஜராத் அருகே கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்குதல் ஏதும் நடந்துவிடாமல் இந்திய கடற்படை பாதுகாப்பு தருகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.அப்போது மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை இந்திய கடற்படை தருவதில்லை. இந்திய கடற்படை தமிழக மீனவர்களுக்கு ஏன் உரிய பாதுகாப்பை தருவதில்லை என்ற கேள்வியை, இதுவரை எந்தக் கட்சியும் எழுப்பாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply