500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ய பி.பி.சி.எப்., கோரிக்கை

3829266தானே: ‘நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளதால், 500 மற்றும் 1,000 ரூபாய் முகமதிப்புக் கொண்ட நோட்டுக்களை ரத்து செய்ய வேண்டும்’ என, பாரதிய வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டமைப்பு (பி.பி.சி.எப்.,) கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு பாரதிய வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஓம் பிரகாஷ் சர்மா அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டில் போலி ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் கோடிக்கணக்கில் உள்ளது. அவற்றை கண்டுபிடிப்பது சிரமமான பணியாக உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே, போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட பாகிஸ்தான் ஆதரவு தருகிறது. போலி ரூபாய் நோட்டுக்கள் புழக்கம், பயங்கரவாதிகளின் தாக்குதலை விட ஆபத்தான ஒன்று. பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்ணால் காண முடியும். இதன் பாதிப்பை கண்ணால் காண முடியாது. ஆனால், பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

போலி ரூபாய் நோட்டுக்கள் தயாரிப்பு மற்றும் அதன் புழக்கத்தை கட்டுப்படுத்த உளவுத்துறையினர் தவறி விட்டனர். இந்த அபாயத்தை முறியடிக்க தற்போதுள்ள ஒரே வழி, இப்போது புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் முகமதிப்புக் கொண்ட நோட்டுக்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். புதிய வடிவில் ரூபாய் நோட்டுக்களை வெளியிட வேண்டும். இவ்வாறு ஓம் பிரகாஷ் சர்மா கூறினார். இதற்கிடையில், உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் கான்பூர் ரிசர்வ் வங்கியின் மேலாளர் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், ‘ஷாம்லி நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர், 500 ரூபாய் முகமதிப்பு கொண்ட 10 போலி ரூபாய் நோட்டுக் களை ரிசர்வ் வங்கியில் டிபாசிட் செய்துள்ளார்’ என, தெரிவித்துள்ளார். இதேபோல், முசாபர் நகர் மற்றும் மீரட்டில் உள்ள எட்டு வங்கிகளின் மேலாளர்களுக்கு எதிராகவும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *