ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிஎஸ்எல்வி சி-14 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், ஒரே நேரத்தில் 10 செயற்கைகோளை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட் மூலம் 7 செயற்கைகோள்கள் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ளது.
இதற்கான பணிகள் முடிந்ததும், நேற்று முன்தினம் காலை 9.51 மணிக்கு கவுன்ட்-டவுன் தொடங்கியது. இந்த ராக்கெட் இன்று காலை 11.53 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து பாய்கிறது. இந்தியாவுக்கு சொந்தமான ‘ஓஷன்சாட்-2’ என்ற செயற்கைகோள் கடல் வளத்தை ஆய்வு செய்யும். இதன் எடை 960 கிலோ.
கடலில் மீன் நடமாட்டம் இருக்கும் பகுதியை கண்டறிந்து தகவல் அனுப்பும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 6 சிறிய செயற்கைகோள்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமானது.
ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதும் முதலில் ஒஷன்சாட்-2 செயற்கை கோள் விண்ணில் நிறுத்தப்படும். பின்னர், மற்ற செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்படும். இதற்கான இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது பிஎஸ்எல்வி சி-14 ராக்கெட்.
Leave a Reply