புதுடில்லி : “மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் எங்கள் கட்சியை விட, காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும்’ என,தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்., தலைவருமான சரத் பவார் கூறியதாவது: மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில், நாங்கள் 112 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறோம். காங்கிரஸ் 170 இடங்களில் போட்டியிடுகிறது. எனவே, கண்டிப்பாக தேசியவாத காங்கிரசை விட, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். மகாராஷ்டிராவில் மீண்டும் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு சரத் பவார் கூறினார்.
கடந்த இரு தினங்கள் வரை மகாராஷ்டிராவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி ஆட்சி ஏற்படும் போது, சரிபாதி ஆண்டுக்காலம், தங்கள் கட்சி முதல்வர் ஆட்சி செய்ய அனுமதிக்கப் படும் நடைமுறை தேவை என்று கூறிவந்தனர். உ.பி.,யில் மாயாவதி ஆட்சி முன்பு பா.ஜ.,வுடன் ஒப்பந்தம் போட்டது போல, மகாராஷ்டிராவிலும் தங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்க ஏதாவது வழிகண்டாக வேண்டும் என்ற அடிப்படையில் பேசி வந்தனர். அப்படி முதல்வர் பதவி கிடைக்கும் பட்சத்தில், சரத் பவார் அதற்கு ஏற்றவர் என்ற பேச்சும் எழுப்பப் பட்டது. ஆனால், சரத் பவார் தற்போதைக்கு மத்திய அரசில் அங்கம் வகிப் பதை தொடர விரும்புகிறார் என்பதையும், மாநிலத்தில் கூட்டணிக் குழப்பம் ஏற்படுத்த விரும்பவில்லை என்பதையும் நாசூக்காக தெரிவித்து விட்டார்.
Leave a Reply