பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக அணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறது. திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை கூடிய கட்சியின் நிர்வாகக்குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினர் ஒருவர் கொலையுண்ட வழக்கு தொடர்பான பிரச்சினைகள் காரணமாகவே கூட்டணி முறிந்ததாக பாமக கூறுகிறது.
அக்கொலை வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் முன்னாள் மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த வேறு மூன்று பேர், இன்னும் பல பாமகவினர் என்று மொத்தம் 22 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. போலீசார் புலன்விசாரணையில் ராமதாஸ் குடும்பத்தினர் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவ்விடுவிப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அத்தீர்ப்பினை எதிர்த்து சண்முகம் மேல்முறையீடு செய்த நிலையில், பாமக தலைவர் கொ.க.மணி அதிமுக பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தும் மேல்முறையீட்டு மனு தாக்கலாகியிருக்கிறது. இந்நிலையில் அதிமுகவுடன் உறவு தேவையில்லை என்று நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியதாகவும், அதன்படியே கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக முடிவெடுக்கப்பட்டதாகவும் நிர்வாகக்குழு தீர்மானம் கூறுகிறது.
Leave a Reply