வாஷிங்டன்: இலங்கை அழிவுப்பாதையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதை நான் மாற்றி அமைப்பேன் என்று தனது கிரீன் கார்டு காலாவதியாகி விடாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக அமெரிக்காவுக்கு வந்துள்ள இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும், கூட்டுப் படைத் தலைவருமான சரத் பொன்சேகா.
பொன்சேகா, அமெரிக்க அரசின் கிரீன் கார்டு பெற்றவர். இந்த கார்டு பெற்றவர்கள், அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் வர வேண்டும். இல்லாவிட்டால் கிரீன் கார்டு காலாவதியாகி விடும்.
இதற்காக தற்போது அமெரிக்காவுக்கு வந்துள்ளார் பொன்சேகா. வாஷிங்டன் வந்த அவர் அங்குள்ள புத்த கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டார்.
அவருடன் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் ஜாலிய விக்கிரமசிங்கேவோ அல்லது தூதரக பாதுகாப்பு அதிகாரி சமந்தா சூரியபண்டாரவோ உடன் வரவில்லை. பொன்சேகா மட்டும் போய் சாமி கும்பிட்டார்.
பொன்சேகாவை வரவேற்ற ஆலய தலைமை பிக்கு அவருக்கு ஆசி வழங்கினார்.
பின்னர் பொன்சேகா கூறுகையில், அனைவரும் வன்னியின் யுத்த வெற்றியை பற்றி பேசுகிறார்கள். அங்கு இடம்பெற்ற இறுதி 10 நாள் யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால், ஐயாயிரம் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த படைவீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்திருக்காவிட்டால், யுத்தம் நிறைவுற்றிருக்காது. எனவே அவர்களுக்கு நாம் முதலில் வணக்கம் செலுத்தவேண்டும்.
யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யப்பட வேண்டும், மீண்டும் நாம், ஒரு பிரபாகரன் தோன்றுவதற்கு வழிவகுத்து விடக் கூடாது.
நாடு இப்போது அழிவுப்பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. நாம் நாட்டை, பிழையான வழியில் செல்ல அனுமதிக்கக் கூடாது. எனவே நாட்டை சரியான வழியில் நடத்திச்செல்ல நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
பொன்சேகாவின் இந்தப் பேச்சைப் பார்த்தால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று தெரிகிறது.
ரணிலுடன் சிங்கப்பூரில் ரகசிய சந்திப்பு..
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு வரும் வழியில் சிங்கப்பூரில் வைத்து ரணில் விக்கிரமசிங்கேவை பொன்சேகா சந்தித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள, குரொன் பிளாசா ஹோட்டலில் 25ம் தேதி இரவு இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது இருவரும் அதிபர் தேர்தல் குறித்துப் பேசியுள்ளனர்.
அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த இலங்கை எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. பொன்சேகாவை நிறுத்த ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில், ரணிலுடன் பொன்சேகா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பொன்சேகாவின் இந்த நகர்வுகள் ராஜபக்சே மற்றும் அவரது தம்பிகளுக்கு பெரும் கடுப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாம்.
Leave a Reply