ஐதராபாத் : ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு காரணமாக, 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. முக்கிய அணைகளில் இருந்து கட்டுக்கடங்காத அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், விஜயவாடா மற்றும் 400 கிராமங்கள் தொடர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன.
ஐதராபாத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த பேய்மழை, மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது. கர்னூல், கிருஷ்ணா, மெகபூப் நகர், குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை. 50க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்; 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். மீட்புப் பணிகளில் 550 ராணுவ வீரர்கள், நீச்சல் வீரர்கள் 1,000 பேர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த மழை, நேற்று ஓய்ந்தது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆறுதல் அளித்தது. கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், விஜயவாடா – ஐதராபாத் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசைலம் அணையில் இருந்து 11 லட்சம் லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால், அந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த நீர், நாகார்ஜுன சாகர் அணைக்கு வந்து சேர்ந்ததும், அங்கிருந்து பத்து லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு, பிரகாசம் மதகுக்கு வந்து சேர்ந்தது. பிரகாசம் மதகில் ஏற்கனவே நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீசைலம், நாகார்ஜுன சாகர் அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் வருவதால், பெருமளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது. விஜயவாடா நகரம் முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. விஜயவாடா அருகே இப்ராகிம் பட்டினம் என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். இங்குள்ள மனநல காப்பகமும் தண்ணீரில் முழ்கியது. இங்கிருந்த 30 பேரும் வெள்ளத்தில் சிக்கினர். கடுமையான முயற்சிக்கு பின், இவர்களை கடற்படை வீரர்கள் மீட்டனர்.
சோனியா பார்வை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் நேற்று ஐதராபாத் வந்தனர். முதல்வர் ரோசய்யா, அவர்களை சந்தித்து வெள்ள பாதிப்பு குறித்து அறிக்கை அளித்தார். பின், அவர்கள் ஹெலிகாப்டரில் சென்று, மெகபூப் நகர், கர்னூல் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். சோனியா கூறியதாக ஆந்திர முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,”விரைவில் இயல்பு நிலை திரும்பும் என, நம்புகிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆந்திர அரசு பாராட்டத்தக்க அளவில் செய்துள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.12 ஆயிரம் கோடி சேதம்: வெள்ள நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ரோசய்யா கூறியதாவது: மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.12 ஆயிரத்து 225 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீசைலம் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தால், மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், அடுத்த மூன்று மாதங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.6,000 கோடி அளிக்க வேண்டும். ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இவ்வாறு ரோசய்யா கூறினார்.
கர்நாடகாவில் நிலைமை என்ன? கர்நாடகாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு, 200க்கும் மேற்பட்டோரை பலி கொண்டு விட்டது. 15 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதற்கிடையே, நேற்று மழை நின்றதை அடுத்து, வெள்ளநீர் வேகமாக வடியத் துவங்கியுள்ளது. இருந்தாலும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள லட்சக்கணக்கான மக்கள், அங்கிருந்து தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு தயங்கி வருகின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா கூறியதாவது: வெள்ள சேதம் ஒட்டுமொத்தமாக ரூ. 20 ஆயிரம் கோடியை எட்டும் என, எதிர்பார்க்கப் படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க் கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக பத்தாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 15 மாவட்டங்களிலும் விவசாயம் அடியோடு நாசமாகியுள்ளது. இவ்வாறு எடியூரப்பா கூறினார். இதற்கிடையே, வெள்ளப் பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
Leave a Reply