தற்போது தேர்வு செய்யப்பட உள்ள 1,943 பேரும், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப் பட்ட பட்டியலில் இருந்தே தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிதாக, வேலை வாய்ப்பு அலுவலகத்திடம் இருந்து பதிவு மூப்பு பட்டியல் கேட்டு, தேர்வு செய்யப்படவில்லை.
கடந்த முறை பதிவு மூப்பு தகுதி இருந்த 3,527 பேருக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பியும், கலந்துகொள் ளாமல் புறக்கணித்துள்ளனர்.இவர்களுக்கு இப்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மேலும், 871 பேர் சான்றிதழ்களை சரியாக எடுத்து வராமல் இருந்ததால், கடந்த முறை தேர்வு செய்யப்படவில்லை. இவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. பொறுப்பில்லாமல் செயல்பட்ட 4,398 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதன் மூலம், புதிதாக பல பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வித் துறையில் புதிதாக 1,943 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 6, 7ம் தேதிகளில் நடக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சிக்கு 7,443 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இறுதிப் பட்டியல் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.தொடக்க கல்வித் துறையில் 1,943 இடைநிலை ஆசிரியர்களை (தமிழ் வழி) நியமனம் செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தெரிவித்துள்ள பல்வேறு இன சுழற்சி மற்றும் முன்னுரிமை ஒதுக்கீடுகளைப் பின்பற்றி, மாநில வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் 1,943 ஆசிரியர்களும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளவர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களால் சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அருந்ததியினருக்கு 3 சதவீத ஒதுக்கீடு வழங்கும் வகையில், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொண்ட எஸ்.சி., பிரிவினரில் இருந்து அருந்ததியினர் இனத்தைக் கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி., பிரிவினரின் ஜாதிச்சான்று சரிபார்க்கும் பணி 6ம் தேதி நடைபெறும். இதில் பங்கேற்க 3,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த முறை மாவட்ட அளவில் சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சி நடந்தபோது, அழைப்புக் கடிதம் அனுப்பியும் கலந்துகொள்ளாத 3,527 பேர், வேலை வாய்ப்பு அலுவலகத்தால் தாமதமாக பரிந்துரை செய்யப்பட்டதால் கலந்துகொள்ள முடியாத 45 பேர், சான்றிதழ்களை சரியாக சமர்ப்பிக்காத 871 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் வகையில், அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்ச்சி 7ம் தேதி நடக்கிறது.அனைத்து பதிவுதாரர்களுக்கும் அவரவர் வீட்டு முகவரி அடிப்படையில், அந்தந்த மாவட்ட தலைநகரில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்க உள்ளன. எந்த தேதி வரை பதிவு செய்தவர்கள், சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம், தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்து விடுபட்டவர்களுக்கு, வேலை வாய்ப்பு அலுவலகத்தால் தற்போது பரிந்துரை செய்யப்பட்டு, அவர்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதிலும் விடுபட்டவர்கள் இருந்தால் அவர்கள், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கமிஷனரை அணுகலாம். “கட்-ஆப்’ தேதிக்குள் முன்னுரிமை இருந்தால், உரிய பரிந்துரை செய்யப்பட்டு, 7ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொள்ள வேண்டும். தகுதி வாய்ந்த அனைவருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதில் தெரிவித்துள்ளபடி, அனைத்துச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன், சி.இ.ஓ., நிர்ணயித்துள்ள மையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.சான்றிதழ் சரிபார்த்தல் பணி முடிந்ததும், அவை ஆய்வு செய்யப்பட்டு 15ம் தேதிக்குள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன
Leave a Reply