மும்பை: “வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் விசாக்கள் புதுப்பிக்கப்படாத போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என, மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், துபாய் சர்வதேச நிதி மையம் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது: ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். முதலாளிகள் சில நேரங்களில், இந்திய பணியாளர்களின் விசாக் களை புதுப்பிக்க, வேண்டுமென்றே காலம் தாழ்த்தலாம். இதனால், அவர்கள் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கும் சூழல் ஏற்படுகிறது.
ஐக்கிய அரபு குடியரசை சேர்ந்த தொழிலாளர் துறை, மிகவும் ஒத்துழைப்பு அளிப்பதோடு, இந்திய பணியாளர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில், வளைகுடா நாடுகள் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியாவில், எரிசக்தி, சாலை, துறைமுகம், விமானம், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஆகிய துறைகளில், திட்டத்திற்கு தேவையான முதலீடு 7.45 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இவற்றில் 30 சதவீதம் முதலீடு, பொது தனியார் கூட்டு திட்டத்தின் மூலம் தனியார்களிடம் இருந்து கிடைக்கும். இவ்வாறு வயலார் ரவி கூறினார்.
Leave a Reply