இடாநகர் : “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதி, இதில் சீனாவுக்கு உரிமை கோர எந்த உரிமையும் இல்லை’ என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். அருணாச்சலப் பிரதேசம் இடாநகரில், நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: சீனாவிடம், இந்திய இறையாண்மையை அடகு வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதிதான்.
சர்வதேச எல்லை தொடர்பாக, கடந்த ஏழு ஆண்டுகளில், இரு நாடுகளுக்கிடையே 11 முறை பேச்சு நடைபெற்றுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் தங்களுடையது என்ற, சீனாவின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அருணாச்சலில் முறையாக தேர்தல்களும் நடந்து வருகின்றன. இரண்டு பிரதிநிதிகள், லோக்சபாவுக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளனர் என்று தொடர்ந்து அதில் கூறி வருகிறோம். சீன குடியரசில் உள்ள திபெத், முழு சுதந்திரமான மாகாணம் என்பதைத்தான் இந்தியா அங்கீகரிக்கிறது. அதனால் அதை திபெத் என்று தனியாகக் கூறுவது இல்லை. ஏழை எளியவர்களுக்கு,மானிய விலையில் அத்யாவசியப் பொருட்களை வழங்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசு, விரைவில் சட்டம் இயற்றவுள்ளது.
ஒரு குடும்பத்துக்கு 25 கிலோ அரிசி அல்லது, கிலோ ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் கோதுமை வழங்குவதுதான் இந்த அரசின் இலக்கு. ஏழை எளியமக்களுக்கு, மானிய விலையில் அத்யாவசியப் பொருட்களை வழங்குமாறு, மாநில அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றுக்கு, 131 ரூபாய் என்றும், டீசல் மற்றும் மண்ணெண்ணைக்கு முறையே 17, 31 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
Leave a Reply