இன்ஜீனியரிங்,பாலிடெக்., கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு கடும் ஆள்பற்றாக்குறை

posted in: கல்வி | 0

சேலம்: இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிகளுக்கு கடும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் கிடைப்பதில் கடும் பற்றாக்குறை காணப்படுகிறது.

அதனால், கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு வெளியில் வரும் மாணவர்களை கூட ஆசிரியர்களாக நியமிக்கும் நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளும் 250க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் நுழைவு தேர்வை ரத்து செய்த பின், தொழில்நுட்ப படிப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. மூன்றாண்டுகளாக ஆண்டுக்காண்டு இன்ஜினியரிங் கல்லூரிகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

கடந்த ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளுக்கு மாணவர்களிடையே இருந்த மவுசை மனதில் கொண்டு, புதிதாக துவக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளும் இத்துறையை அறிமுகப்படுத்தியுள்ளன. உலக பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் ஐ.டி., நிறுவனங்களின் சரிவு காரணமாக, அத்துறையில் வேலைவாய்ப்பும் குறைந்தது. ஆனாலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் ஐ.டி., மற்றும் சாப்ட்வேர் துறையில் வேலை பார்க்கவே விரும்புகின்றனர். மெக்கானிக் துறையில் படித்தவர்களுக்கும் தனியார் நிறுவனங்களில் அதிக வாய்ப்பு இருப்பதால், பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பணிக்கு வர விரும்புவதில்லை. அதற்கு தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் தரும் குறைவான சம்பளமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சமீப காலமாகவே அதிக அளவிலான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏற்கனவே அத்துறைகளில் பயின்று, அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று விட்டனர். தற்போது படித்து வெளியில் வரும் மாணவர்களும், குறைவான சம்பளம் கிடைத்தாலும், சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலைக்கு சேரவேண்டும் என நினைக்கின்றனரே தவிர, ஆசிரியர் பணிக்கு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் குறைந்த சம்பளமும் ஒரு காரணமாக உள்ளது. தனியார் கல்லூரி சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் காணப்படுகிறது. நடப்பாண்டில், கல்விக்கட்டணம் வசூலிப்பதில் கெடுபிடி, அதிக அளவிலான போட்டிக்கல்லூரிகள் என்பதால், அதிக நன்கொடை கொடுத்து மாணவர்கள் சேராததால், பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் குறைவாக இருக்கிறது.

அதிக சம்பளம் கொடுத்து, ஆசிரியர்களை நியமிப்பதில் பல கல்லூரிகளுக்கு உடன்பாடில்லை. ஒரு தொழில்நுட்ப படிப்பை முடித்து வெளிவரும் மாணவன், உடனடியாக கல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியப்பணியில் போதிய அனுபவமும், அறிவும் இல்லாதவர்களால் வழங்கப்படும் கல்வி முழுமையானதாக அமையாது. இதே நிலைதான் பெரும்பாலான கல்லூரிகளில் நிலவி வருவதால், வரும் கல்வியாண்டில் தொழில்நுட்ப படிப்புகளின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு, கல்வியாளர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *