சேலம்: “”இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக, தமிழக அரசு இதுவரை எதையும் செய்யவில்லை,” என பா.ம.க., தலைவர் மணி புகார் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில், அவர் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையால் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 200 முறை தாக்குதல் நடத்தப்பட்டு, 500 பேர் காயம் அடைந்தனர். உலகில் எந்த ஒரு நாட்டிலும், இது போன்ற கொடூர சம்பவங்கள் நடந்தது இல்லை.
இந்த தாக்குதல்களை, இந்திய கடற்படை தடுக்கவோ, திருப்பி தாக்குதல் நடத்தவோ இல்லை. ஒருமுறை வானத்தை நோக்கி சுட்டு இருந்தால் கூட, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இலங்கை கடற்படை யோசித்து இருக்கும்.முல்லைப் பெரியாறு பிரச்னையில், நம்முடைய எச்சரிக்கையையும், ஒப்பந்தத்தையும் மீறி, தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் கூட, தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, இந்தப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. இலங்கையில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், முள் வேலியில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அதை, அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் கூட கண்டித்து உள்ளன.ஆனால், தமிழக அரசு, இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அரசிடம் பெரிதாக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக, தமிழக அரசு எதையும் இதுவரை செய்யவில்லை.பா.ம.க., சார்பில், இலங்கைத் தமிழர்களின் இன்னல் நீக்கக் கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது; மேலும் நடத்தப்படும்.இவ்வாறு மணி கூறினார்.
Leave a Reply