ஐ.நா.: ஈரான் நினைத்தால் 18 மாதங்களிலேயே ஒரு அணுகுண்டைத் தயாரிக்க முடியும். அத்தகைய திறமையை அது பெற்றுள்ளது என்று ஐரோப்பிய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
யுரேனியத்தை சுத்தப்படுத்தி அதை ஆயுதத் தரத்துக்கு உருவாக்க 6 மாதம் தேவைப்படும். பிறகு அதை அணு ஆயுதமாக தயாரிக்க 12 மாதங்கள் தேவைப்படலாம் என்று அவர்கள் கணித்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே யுரேனியத்தை செறிவூட்டும் திறனை ஈரான் பெற்றுள்ளது. இந்தப் பணியை தொடர விடாமல் தடுத்தால்தான் ஈரானால் அணு ஆயுதங்களைத் தயாரிக்காமல் தடுக்க முடியும்.
இந்தப் பணியில் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்சு, ஜெர்மனி, ரஷியா, சீனா ஆகிய 6 நாடுகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புத் திறன் என்ன என்பதைக் கண்டுபிடிக்க கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவின் சிஐஏ, இங்கிலாந்தின் எம்ஐ6, இஸ்ரேலின் மொசாத், பிரெஞ்சு, ஜெர்மனி நாடுகளின் உளவு அமைப்புகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இதுவரை ஈரானின் திறன் என்ன என்பது குறித்து உறுதியான தகவல்கள் இவர்களுக்குக் கிடைக்கவில்லை.
ஈரானிடம் அணு ஆயுதம் உள்ளதா, அதனால் தயாரிக்க முடியுமா என்பது குறித்து இந்த நாடுகளின் உளவு அமைப்புகளிடையே ஒருமித்த கருத்து இதுவரை இல்லை.
இந்த நிலையில்தான் ஐரோப்பிய உளவு அமைப்புகள் சில, ஈரானால் 18 மாதங்களில் அணு குண்டு தயாரிக்க முடியும் என கிட்டத்தட்ட உறுதிபடச் சொல்லியுள்ளன. இது முன்பு கணிக்கப்பட்ட கால அளவை விட மிகவும் குறுகியது என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பீதி ஏற்பட்டுள்ளது.
ஈரான் யுரேனிய செறிவூட்டும் முயற்சியை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கோரி வருகின்றன. அதை நிறுத்தினால் பொருளாதார, அரசியல் சலுகைகளை தருவதாகவும் ஆசை காட்டிப் பார்த்தன. ஆனால் ஈரான் இவற்றை அடியோடு நிராகரித்து விட்டது. மூன்று முறை ஐ.நா. பொருளாதாரத்த டை விதிக்கப்பட்டபோதும் கூட அசரவில்லை ஈரான்.
இந்த நிலையில், மருத்துவப் பணிகளுக்கான அணு உலை ஒன்றை அமைக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்குத் தேவையான எரிபொருளை இணைக்கும் கலன் அதனிடம் இல்லை. அதை செய்து தருவதாகவும், இதற்காக குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை தங்களிடம் அனுப்பி வைக்குமாறும் ரஷ்யா, பிரான்ஸ் நாடுகள் கோரின. ஆனால் அவ்வாறு அனுப்பி வைக்க ஈரான் மறுத்து விட்டது.
கடந்த பிப்ரவரி மாதம்தான், அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் கூறுகையில், 2013ம் ஆண்டு வரை ஈரானால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார்.
மொசாத் தலைவர் மெயர் டகான் கூறுகையில், 2014ம் ஆண்டு வரை ஈரானால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என உறுதியாக நம்புவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள 18 மாதத்தில் ஈரானால் அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்ற புதிய வாதத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது
Leave a Reply