ஆனந்த்நாக் (காஷ்மீர்) : “”காஷ்மீரில் அமைதியை உருவாக்க உருப்படியான யோசனைகளுடன் வரும் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,” என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இரண்டு நாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென்றனர். அவர்களுடன் மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி, குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, பிருதிவிராஜ் சவான், முனியப்பா ஆகியோரும் சென்றனர். ஸ்ரீநகர் சென்றடைந்த அவர்களை காஷ்மீர் கவர்னர் என்.என்.ஓரா, முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர், ஆனந்த்நாக்கில் பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:காஷ்மீரில் அமைதியை உருவாக்க, அர்த்தமுள்ள யோசனைகளுடன் வரும் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதேபோல், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை அந்நாட்டு அரசு ஒடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகளைத் துவக்க முடியும்.பாகிஸ்தான் மக்கள், தங்கள் நாடு அமைதியாக இருக்க வேண்டும்; வளர்ச்சி அடைய வேண்டுமென விரும்புகின்றனர். நாம் நட்புக்கரம் நீட்டும் போது, அதற்கேற்ற வகையில் பாகிஸ்தான் செயல்பட்டால், இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
வன்முறை மற்றும் பயங்கரவாத காலம் முடிவுக்கு வந்து விட்டது. யார் வன்முறையை கைவிடுகின்றனரோ அவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்தப்படுமென, ஐந்து ஆண்டுகளுக்கு முன், எனது அரசு அறிவித்தது. அதேபோல, காஷ்மீரில் பல பிரிவினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அத்துடன் பல நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன. காஷ்மீரின் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளைத் தீர்ப்பதன் மூலம், அனைத்துப் பிரிவு மக்களையும் நாங்கள் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல விரும்புகிறோம்.நிரந்தர அமைதி: கடந்த 2004 மற்றும் 2007ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், பாகிஸ்தானுடன் மிகவும் பயனுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் துவக்கப்பட்டன. காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது உட்பட பல பிரச்னைகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டன.
இந்தப் பேச்சுவார்த்தைகளால், 60 ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டிச் சென்றனர்; பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணைந்தன. பாகிஸ்தான் உடனான வர்த்தகமும் மும்மடங்கு அதிகரித்தது.இருந்தாலும், நாம் கண்ட இந்த முன்னேற்றங்கள் எல்லாம், பயங்கரவாதச் செயல்களால் சீர்குலைக்கப்பட்டுள்ளன. இந்தியா – பாகிஸ்தானை நிரந்தர பகை நாடுகளாக்க பயங்கரவாதிகள் முற்பட்டுள்ளனர். இந்தியாவுடன் நல்லுறவு ஒத்துழைப்பு தொடர வேண்டுமென, பாகிஸ்தான் மக்கள் விரும்புகின்றனர். நிரந்தர அமைதி ஏற்பட வேண்டுமென நினைக்கின்றனர்.எல்லையில் உள்ள வர்த்தக வசதிகள் போதுமானதாக இல்லை. வங்கி நடவடிக்கைகளும் இல்லை. சுங்கத் துறைக்கான வசதிகளை பலப்படுத்த வேண்டும். வர்த்தக கண்காட்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லவும், அங்கிருந்து இங்கு வரவும் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தண்டனைக் காலம் முடிந்த ஏராளமான பாகிஸ்தான் கைதிகள் இந்திய சிறைகளிலும், இந்திய கைதிகள் பாகிஸ்தான் சிறைகளிலும் வாடுகின்றனர். இது போன்ற மனிதாபிமான ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண, பாகிஸ்தானின் ஒத்துழைப்பு அவசியம்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதல் ரயில் போக்குவரத்து : காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், ஆனந்த்நாக் மற்றும் குவாசிகுந்த் இடையே 18 கி.மீ., தூர ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முதல் ரயில் போக்குவரத்தை பிரதமர் மன்மோகன் சிங் கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது பேசிய மன்மோகன் சிங், “”ஜம்மு – ஸ்ரீநகர் இடையே பனிகால் வழியாக ரயில்கள் ஓடும் நாள் வெகு தூரத்தில் இல்லை,” என்றார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவின் வருகையை ஒட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Leave a Reply