லண்டன்:நோபல் பரிசு வழங்கும் நார்வேயை சேர்ந்த பரிசு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா (48), சர்வதேச அரசியலில் புதிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். ஒபாமாவின் முயற்சி காரணமாக, உலக நாடுகள் உடனான தூதரக உறவுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களும் இந்த விஷயத்தில் முக்கிய பங்காற்ற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.உலக நாடுகள் இடையேயான அரசுமுறை உறவுகளை மட்டுமின்றி, மக்கள் இடையேயான நல்லுறவுகள் மற்றும் ஒத்துழைப்பை பேணிக் காக்கவும் ஒபாமா தீவிரமாக பங்காற்றி வருகிறார். அணுஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற ஒபாமாவின் தொலைநோக்கு கண்ணோட்டம், அணுஆயுதப் பரவல் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தைகளுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது.ஒபாமா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் அமெரிக்கா தற்போது உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜனநாயகமும், மனித உரிமைகளும் பலப்படுத்தப் பட்டுள்ளன.
ஒபாமாவைப் போன்ற வெகுசிலர் மட்டுமே, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். சிறப்பான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்துள்ளனர். “உலகளாவிய சவால்களை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட இதுவே சரியான தருணம்’ என, ஒபாமா விடுத்த வேண்டுகோளையும் நோபல் பரிசு கமிட்டி அங்கீகரித்துள்ளது.இவ்வாறு நோபல் பரிசு கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply