புதுடில்லி: ஆலடி அருணா கொலை வழக்கில் தண்டனை பெற்ற, கல்லூரி அதிபர் எஸ்.ஏ. ராஜாவின் உடல் நிலையை பரிசோதனை செய்வதற்காக, மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு ஒன்றை அமைக்க , தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஏ., ராஜா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.ஏ. ராஜாவை, முதலில் மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத போதும், கடந்த 30ம் தேதி, அவரை சிறைத் துறை மருத்துவமனைக்கு மாற்றினர். இதய நிலை குறித்து அறிய ஆஞ்சியோகிராம் போன்ற பரிசோதனைகள் அவசியம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், “இதய அடைப்பைக் கண்டறியும் பலூன் பம்ப் தெரபி’ வசதிகள் இல்லை.
எனவே, திருநெல்வேலி கேலக்சி மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருப்பதாக மாநில அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதுபற்றி நீதிபதிகள் கூறியதாவது:
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவமனை மற்றும் கேலக்சி மருத்துவமனை ஆகியவற்றை சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர்கள் மூன்று பேர் அடங்கிய மருத்துவ குழு ஒன்றை மாநில அரசு அமைத்து, ராஜாவின் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், அது பற்றி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Leave a Reply