இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 10 பேர் அங்கு சனிக்கிழமை செல்கின்றனர்.
இலங்கையில் 5 நாள்கள் தங்கியிருக்கும் அவர்கள், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட உள்ளனர். அந்த நாட்டு அமைச்சர்கள், அதிபர் ராஜபட்ச உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச உள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலைமை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச அழைப்பு விடுத்தார்.
திமுக அணி எம்.பி.க்கள்… அவரது அழைப்பை ஏற்று, முதல்வர் கருணாநிதி சார்பில் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 10 பேர் இலங்கைக்கு சனிக்கிழமை செல்கின்றனர்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில், ஏ.கே.எஸ்.விஜயன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகிய திமுக எம்.பி.க்களும், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம்.ஆரூண் ஆகிய காங்கிரஸ் எம்.பி.க்களும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவனும் இடம்பெற்றுள்ளனர்.
முதல்வருடன் சந்திப்பு… இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவினர், முதல்வர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு தங்கபாலு அளித்த பேட்டி: முதல்வர் சார்பில் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் 10 பேரை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அங்குள்ள உண்மை நிலவரங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிப்பார்கள்.
அதன் அடிப்படையில், முதல்வரும், நாங்களும் எங்களது கருத்துருவை மத்திய அரசிடம் அளிப்போம்.
எம்.பி.க்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய- இலங்கை அரசுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இதுகுறித்த முறையான அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என்றார் தங்கபாலு.
Leave a Reply