ஈரோடு: ஐந்து நாட்களில் மஞ்சள் விலை, குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் அதிகரித்து, நேற்று 11 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்று, சாதனை படைத்துள்ளது. ஈரோட்டில், ஈரோடு ஒழுங்குமுறை மார்க்கெட், வெளிமார்க்கெட், ஈரோடு சொசைட்டி மார்க்கெட், கோபி சொசைட்டி மார்க்கெட் ஆகிய நான்கு மஞ்சள் மார்க்கெட் செயல்படுகிறது.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளான கோபி, சத்தியமங்கலம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கர்நாடகாவில் இருந்தும், மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. ஈரோடு மார்க்கெட்டில் இருந்து, வடமாநில வியாபாரிகள், அதிகளவில் மஞ்சள் வாங்கிச் செல்கின்றனர். மஞ்சள் தேவை சிறிது குறைவு ஏற்பட்டதால், ஆகஸ்ட் மாத இறுதியில், ஒரு குவிண்டால் 7,440 ரூபாயானது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன், மஞ்சள் விலை ராக்கெட் வேகத்தில் உயரத் துவங்கியது. கடந்த 21ம் தேதி, விரலி 9,335 ரூபாய், கிழங்கு 9,263 ரூபாயாக விற்ற மஞ்சள், 26ம் தேதி, விரலி 10 ஆயிரத்து 476 ரூபாய், கிழங்கு 10 ஆயிரத்து 419 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று மீண்டும் விலை உயர்ந்து, விரலி 11 ஆயிரத்து 211 ரூபாய், கிழங்கு 11 ஆயிரத்து 299 ரூபாய்க்கும் விற்று, முதன் முறையாக சாதனைப் படைத்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில், ஒரு குவிண்டால் மஞ்சள், 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலையை விட அதிகம் உயர்ந்து செல்வது, விவசாயிகளிடையேயும், வியாபாரிகளிடையேயும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply