தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், நித்யானந்தம், வனிதா, சுமதி, சாந்தி, ஸ்ரீபிரியா, சரளாதேவி, சவுந்திரவள்ளி, விருதுநகரை சேர்ந்த பரமசிவம், சேதுராமன் ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட்:

தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்கு நாங்கள் பத்து பேரும் தேர்வு செய்யப்பட்டோம். எங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் பணி வழங்க கடந்த ஜூலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே பணியாற்றிய தற்காலிக தட்டச்சர்கள் பணி நீக்கம் செய்யக்கூடாது என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

விசாரணை நடத்திய ஐகோர்ட் கிளை, “இறுதி உத்தரவு வரும்வரை தற்காலிக தட்டச்சர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது’ என உத்தரவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை. ராமநாதபுரம் மீன் வளர்ப்புத்துறை உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் தட்டச்சர்களுக்கான 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை தங்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும் மனுவில் கூறியிருந்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் விஸ்வலிங்கம் ஆஜரானார். நீதிபதி கே.என். பாட்ஷா உத்தரவில், “”மனுதாரர்கள் பத்து பேருக்கும் பத்து நாட்களுக்குள் தட்டச்சர் பணியிடங்களை வழங்க ராமநாதபுரம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *