மதுரை: தீபாவளியையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏராளமான சிறப்பு பஸ்களை இயக்கின. இதில், மதுரை மண்டலம் அதிகபட்சமாக 4.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தீபாவளியையொட்டி தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்து பஸ்களையும் சிறப்பு பஸ்களாக ஆக்கி, அதிக கட்டணத்துடன் இயங்கின.
இதில், முந்தைய நாளான அக். 16ம் தேதி மட்டும் மதுரை மண்டலம் 4.40 கோடி ரூபாய் (கடந்த ஆண்டு ரூ. 1.95 கோடி) வருவாய் பெற்றுள்ளது. இதிலடங்கிய மதுரை கோட்டத்திற்கு, 1.29 கோடி ரூபாயும், நெல்லை 81 லட்சம், நாகர்கோவில் 71 லட்சம், விருதுநகர் 57 லட்சம் ரூபாயும் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.45 கோடி ரூபாய் அதிகமாகும். இதேபோல, மற்ற மண்டலங்களில் கோவை மண்டலத்திற்கு 1.50 கோடியும், ஈரோடு 1.41 கோடியும், சேலம் 1.11 கோடியும். விழுப்புரம் 84 லட்சமும், திருச்சி 1.70 கோடியும், கும்பகோணம் 1.32 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளன.
பொதுவாக அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 முதல் 30 சதவீத வருவாய் அதிகரித்துள்ளது. அதேபோல, தீபாவளிக்கு மறுநாளான அக். 18ம் தேதி மதுரை மண்டலத்திற்கு 2.32 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இதில், மதுரை கோட்டத்திற்கு 60.91 லட்சமும், நெல்லை 45.39 லட்சம், நாகர்கோவில் 40.55 லட்சம், திண்டுக்கல் 52.48 லட்சம், விருதுநகர் 33.56 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள், 2.09 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
மதுரை மண்டலத்தில் தீபாவளியன்று மட்டும் 50 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்தது. பொதுவாக சாதாரண நாளில் மாநிலம் முழுதும் அனைத்து போக்குவரத்துக் கழகங்கள் மூலமும் 1.95 கோடி பேர் பஸ் பயணம் செய்வர். ஆனால் தீபாவளி நாளில் 2.60 கோடி பேர் பயணித்துள்ளனர். மதுரை மண்டலத்தில் அதிக பயணிகளை அழைத்துச் சென்றதால் பஸ் ஊழியர்களை நிர்வாகத்தினர் பாராட்டினர்.
Leave a Reply