புதுடில்லி:மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், டில்லியில் உள்ள தொலைத்தொடர்புத் துறை அலுவலகமான சஞ்சார் பவனில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.இதுதொடர்பாக சி.பி.ஐ., தகவல் தொடர்பாளர் கூறியதாவது:
தொலைத்தொடர்பு துறையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான லைசென்ஸ் வழங்கியதில், அதாவது கம்பெனிகளை தேர்வு செய்ததில், முறைகேடுகள் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி தொலைத் தொடர்புத் துறையினர் செயல் பட்டுள்ளனர்.சந்தை விலையை விட குறைவான விலைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான லைசென்ஸ் பெற்ற யுனிடெக் ஒயர்லெஸ் சர்வீசஸ் மற்றும் சுவான் டெலிகாம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தங்களுக்கான ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை அதிக விலைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப் பட்டது. இதுதொடர்பான புகாரை விசாரித்த மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம், விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.,க்கு பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரையின் அடிப்படையில், டில்லியில் உள்ள தொலைத் தொடர்புத் துறை அலுவலகமான சஞ்சார் பவனில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலையில் துவங்கிய சோதனை, இரவு வரை தொடர்ந்தது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தால், 2008ம் ஆண்டில், எட்டு புதிய நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.இவ்வாறு சி.பி.ஐ., தகவல் தொடர்பாளர் கூறினார்.
Leave a Reply