ஷார்ஜாவிலிருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், பைலட்கள் மற்றும் விமான பணியாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பயணிகள் கதிகலங்கினர்.
ஷார்ஜாவிலிருந்து லக்னோ வழியாக டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் இரவு ஷார்ஜாவிலிருந்து புறப்பட்டது. விமானத்தை கேப்டன் ரன்பிர் அரோரா, துணை பைலட் ஆதித்யா சோப்ரா ஆகியோர் இயக்கியுள்ளனர். விமான பணியாளர்களாக அமித் கன்னா என்பவரும், மற்றொரு பணிப் பெண்ணும் இருந்துள்ளனர்.
பைலட்களுக்கும், பணியாளர்களுக்கும் ஷார்ஜா விமான நிலையத்திலேயே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஷார்ஜாவிலிருந்து விமானம் புறப்பட்டவுடன் பயண நேரத்தை மைக் மூலம் அறிவித்துள்ளார் பணிப்பெண். இது பைலட் கூறிய நேரத்தை விட மாறுபட்டிருந்தது. இதனால் பணிப்பெண்ணை விமானி அறைக்கு (காக்பிட்) அழைத்து பைலட் ரன்பிர் அரோரா திட்டியுள்ளார். பதிலுக்கு பணிப்பெண்ணும் கறாராக பேசியுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த பைலட் பணிப் பெண்ணின் கைப்பிடித்து தள்ளி காக்பிட் கதவை மூடியுள்ளார்.
ஆத்திரத்தில் காக்பிட் கதவை கையால் ஓங்கி அடித்தார் பணிப்பெண். இதில் அவரது கையில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்த ஆண் பணியாளர் அமித் கன்னா காக்பிட் அறைக்குள் ஆவேசமாக நுழைந்து, பணிப்பெண்ணுக்கு ஆதரவாக பைலட்களுடன் தகராறு செய்தார். அப்போது விமானம் பாகிஸ்தான் வான் எல்லையில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
வாய்த்தகராறு முற்றி பைலட்கள், பணியாளர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விமானத்தை பாகிஸ்தானில் தரையிறக்கிவிடுவேன் என பைலட் எச்சரிக்கை விடுத்துள்ளார். “எங்கு வேண்டுமானலும் கொண்டு போÕ என ஆவேசமாக கூறியுள்ளார் அமித் கன்னா. இரு பைலட்களும் காக்பிட்டுக்கு வெளியே வந்து பணியாளர்களுடன் சண்டையிட்டுள்ளனர். பைலட்கள் இருவரும் இருக்கையை விட்டு எழுந்ததால், பயணிகள் பீதியடைய ஆரம்பித்தனர்.
பயணிகள் சமாதானம் செய்ய, ஒரு வழியாக சண்டை ஓய்ந்து காக்பிட்டுக்கு திரும்பினர் பைலட்கள். லக்னோவில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தரையிறங்கியதும் பைலட்களிடம் மன்னிப்பு கேட்டார் பணியாளர் அமித் கண்ணா. இதனால் லக்னோ விமான நிலையத்திலிருந்து, டெல்லிக்கு தாமதமின்றி விமானம் மீண்டும் புறப்பட்டது.
டெல்லி சென்றவுடன், சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு சென்ற பணிப் பெண் கையில் கட்டு போட்டார். நேராக விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு சென்றார். “பைலட்கள் என் கையை பிடித்து மானபங்கம் செய்தனர்” என புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விமானம் நடுவானில் பறந்தபோது நடந்த இந்த பாதுகாப்பு விதிமுறை மீறல் சம்பவம் பற்றி விமான போக்குவரத்து இயக்குனரகம் தீவிர விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக ஏர் இந்தியா விமானத்தில் சென்ற பைலட்கள், பணியாளர்களிடம் நாளை விசாரணை நடக்கும் என தெரிகிறது.
Leave a Reply