புதுடில்லி:நதிகள் இணைப்பு விவகாரத்தை அரசு மிகவும் எச்சரிக்கையாக கையாளும். சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு செயல்படும்,” என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.”இந்துஸ்தான் டைம்ஸ்’ சார்பில் நடந்த தலைமைப் பண்புகள் குறித்த மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
நதிகளை இணைப்பதன் மூலம் பாசன வசதிகளை அதிகரிக்க முடியும். அதே நேரத்தில், நதிகளை இணைப்பதில் பிரச்னைகள் உள்ளன. சுற்றுச் சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். நதிகளை இணைப்பதன் மூலம், எந்த அளவுக்கு மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு கிடைக்கும் என்பது தொடர்பாக, நிபுணர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.இரண்டு, மூன்று திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன;
திட்ட டிசைன்களும் ரெடியாக உள்ளன. நதிகளை இணைப்பதில் ஒரு சோதனை முயற்சியாக, கென் – பெட்வா நதிகள் முதல் கட்டமாக இணைக்கப்பட உள்ளன. அதே நேரத்தில், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள நதிகளை இணைக்கும் விஷயத்தில் எச்சரிக்கையாகச் செயல் பட வேண்டும். ஏனெனில், சுற்றுச்சூழலும், விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழ்க்கைச் சூழலும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா மாநிலங்களில் வாழ்கிறது. டில்லியில் இருந்தபடி மட்டும் இந்தியாவை உருவாக்க முடியாது. ஆகவே, மாநில அளவிலும், உள்ளூர் அளவிலும் சிறந்த அரசியல் தலைமை உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
Leave a Reply