சென்னை: பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரித் திட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில், இன்டர்நெட்டில், வரிகளை செலுத்துவதற்கான இன்டர்நெட் முகவரியை, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்நேற்று துவக்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:வரிகள் தொடர்பான சட்டங்கள் விரைவில் எளிமைபடுத்தப்படும். சமீபத்தில் நடந்த நிதித்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரித் திட்டம் அமல்படுத்த மாநில அரசுகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என அனைத்து மாநில அமைச்சர்களையும் கேட்டுக்கொண்டார்.வரும் டிசம்பர் மாதத்திற்குள், நாடு முழுவதும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு ஒரே மாதிரியான வரித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த இணையதள சேவை, அதிகமாக வரி செலுத்துபவர்களுக்கு பயன்படும். இதன் முலம் கோப்புகள் பயன்பாடு குறையும்.உலகநாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், இந்தியாவில் உள்ள சீரான வரித் திட்டத்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில், சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையத்தின் தலைவர் அகமத் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Leave a Reply