“கோவை: தமிழகத்தில், “நெட்வொர்க்’ அமைத்து, போலி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் மூலம், போலி பாஸ்போர்ட் தயாரித்துள்ள மூவரை, போலீசார் கைது செய்தனர்; இதன் பின்னணியில் செயல்படும் கும்பலை பிடிக்க, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு, திக்கோடியை சேர்ந்த நாசர் (27), வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டை புதுப்பிக்க, கோவை நவகரையில் உள்ள மனோகரை அணுகினார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறிய அவர், சென்னையைச் சேர்ந்த புரோக்கர் கருப்பசாமியை தொடர்பு கொண்டார். போலி பாஸ்போர்ட்: நாசர் வைத்திருந்த பாஸ்போர்ட், நாமக்கல்லை சேர்ந்த ஒருவரது பாஸ்போர்ட். போலியான அந்த பாஸ்போர்ட்டை புதுப்பிக்க, “நாசர், த/பெ அசைனர் ஹாஜி, 43, தொட்டிபட்டி, லத்துவாடி, நாமக்கல்’ என்ற முகவரியுடன், போலியாக ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் தயாரிக்கப்பட்டது. இவற்றைக் கொண்டு, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மூன்று பேரும் சென்று விண்ணப்பித்தனர்.
அதிகாரியிடம் சிக்கினர்: காலை 10.30 மணிக்கு கொடுத்த விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரிகள், பாஸ்போர்ட்டை சரி பார்க்க,தேசிய தகவல் மைய வெப்சைட்டில் பதிவு எண்ணை கொடுத்தனர். அந்த பாஸ்போர்ட் எண்ணில், வேறு ஒரு முகவரி, போட்டோ, பெயர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாசரை அழைத்து, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன், விசாரணை நடத்தியதில், போலி பாஸ்போர்ட்டுடன் வந்ததாக, அவர் ஒப்புக் கொண்டார். இதனால், நாசரையும், அவருடன் வந்திருந்த கருப்பசாமி, மனோகரை போலீசார் கைது செய்தனர். கருப்பசாமியிடமிருந்து பாஸ்போர்ட் பெறுவதற்கான பல விண்ணப்பங்கள், போட்டோக்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், 25 ஆயிரம் ரூபாய்க்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுப்பதாக, அவர் தெரிவித்தார்.
போலி தயாரானது எப்படி?: ஒரிஜினல் பாஸ்போர்ட் புத்தகத்தில் இருந்த போட்டோவும், முகவரியும், நாசர் கொடுத்த பாஸ்போர்ட்டில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. இந்த பாஸ்போர்ட், சென்னையிலிருந்து தயாரிக்கப்பட்டு, தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2007ல், முத்திரையிடப்பட்ட இந்த புத்தகத்தை, நாசருக்கு வேறு ஒரு புரோக்கர் மாற்றிக்கொடுத்துள்ளார். இதைக்கொண்டு நாசர், துபாய் சென்று வந்துள்ளார். இதன் பின்னரே, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் புதுப்பிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். இதை, பாஸ்போர்ட் அலுவலத்தினர், ஆன்-லைன் முறையில் உடனடியாக தகவல்களை சரிபார்த்ததில், போலி என கண்டறிந்தனர்.
“நெட்வொர்க்’ கும்பலுக்கு வலை: விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட “நோட்டரி பப்ளிக்’ அபிடவிட்டும், போலியானதாக இருக்கலாம். இந்த ஆவணம், பொள்ளாச்சியில் உள்ள நோட்டரி பப்ளிக், “ஷாநவாஸ்’ என்பவரது பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட புரோக்கர் கருப்பசாமி, மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக தெரிவித்துள்ளார். படிப்பு இல்லை என்றாலும், அசல் ஆவணங்கள் போன்றே தயார் செய்துள்ளார்.
“சென்னை, திருச்சி பாஸ்போர்ட் அலுவலகங்களில், போலி பாஸ்போர்ட்டுகளை அதிக அளவில் பெற்றிருக்கலாம்; இதற்கு அங்குள்ள சில ஊழியர்களும் உடந்தையாக இருக்கலாம்’ என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதில், தமிழகம் முழுவதும், “நெட்வொர்க்’ அமைத்து, மோசடி கும்பல் செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பலை பிடிக்க, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஸ்போர்ட் அலுவலர் எச்சரிக்கை: மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் சிலர், தொடர்ந்து போலி ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனர். இவர்களது பட்டியலை பாஸ்போர்ட் அலுவலகம் தயாரிக்கிறது. பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போர், விலாசங்களுக்கான அத்தாட்சியாக ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வயதுக்கான அத்தாட்சியாக பள்ளி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுபோன்ற ஆவணங்கள் இல்லாத சிலர், போலி ஆவணங்களை தயாரித்து, விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கின்றனர். குறிப்பாக, ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை போலியாக தயாரிக்கின்றனர். சில புரோக்கர்கள் இதற்கு உதவுகின்றனர். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, போலி சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டால், விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் அனுப்பப்படுவது நிறுத்தப்படும். இதையறியாமல், புரோக்கர்களை நம்பி விண்ணப்பதாரர்கள் ஏமாறுகின்றனர்.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஜோஸ் கே.மாத்யூ கூறியதாவது: போலி ஆவணங்களை கொடுத்தால், அது, விண்ணப்பதாரர் பற்றிய போட்டோ மற்றும் விவரங்களுடன் கம்ப்யூட்டரில் பதியப்படும். மீண்டும் இவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், கம்ப்யூட்டரில் போட்டோவை பதியும் போது காட்டிக்கொடுத்து விடும். உலகம் முழுவதும், எந்த நாட்டுக்கு சென்றாலும் இவர்கள் பற்றிய விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவாகி விடும். எனவே, இங்கு பாஸ்போர்ட் பெற்றாலும், வெளிநாடுகளுக்கு செல்லும் போது மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, போலி ஆவணங்கள் கொடுப்பதை விண்ணப்பதாரர்கள் தவிர்க்க வேண்டும். இது சட்டப்படி குற்றம். இவ்வாறு மாத்யூ கூறினார்.
Leave a Reply