கசகஸ்தான்: கனடா நாட்டு சர்க்கஸ் நிறுவன உரிமையாளர் 160 கோடி ரூபாய் கொடுத்து ரஷ்ய விண்கலத்தில், விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைத்துள்ளன.
இந்த நிலையத்தின் கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை. எனினும், இந்த விண்வெளி நிலையத்தில் ஐந்தாறு விண்வெளி வீரர்கள் தொடர்ந்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான பிராணவாயு, உணவு, தண்ணீர், மற்றும் கட்டுமான பொருட்களை அமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்கலங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு எடுத்து செல்கின்றன.
ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கனடா நாட்டு சர்க்கஸ் கம்பெனி உரிமையாளர் லாலிபெர்டி(50), அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்த விண்கலத்தில் புறப்பட்டு சென்றனர்.விண்வெளி சுற்றுலாவை, ரஷ்யா ஆதரித்து வருகிறது. இதுவரை ஆறு பேர் விண்கலத்தில் விண்வெளிக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இதற்காக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் கட்டணம் வசூலிக்கிறது. தற்போது விண்வெளி சுற்றுலா சென்றுள்ள கனடா நாட்டு சர்க்கஸ் அதிபர் லாலிபெர்டி 160 கோடி ரூபாய் செலுத்தியுள்ளார்.கசகஸ்தான் ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட சோயூஸ் விண்கலத்தில் இவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் குடிதண்ணீரின் அளவு குறைந்து வருவதை பிரசாரம் செய்யும் நோக்குடன் இந்த பயணம் மேற்கொண்டுள்ளதாக, லாலிபெர்டி தெரிவித்துள்ளார்.முன்னாள் சர்க்கஸ் கலைஞரான லாலி பெர்டி நெருப்பை விழுங்குதல், நெருப்பு வளையத்தை தாண்டுதல் போன்ற சாகசங்களை செய்தவர். விண்வெளி பயண சாகசத்தையும் தற்போது அவர் நிறைவேற்றியுள்ளார். என்னதான் சாகச வீரரானாலும், தரையில் காட்டும் வித்தை வேறு. விண்வெளிக்கு சென்று பத்திரமாக திரும்ப வேண்டும் என்ற கவலையோடு, கண்ணீரோடு கணவருக்கு விடை கொடுத்தார், இவரது மனைவி கிளாடியா.
Leave a Reply