புது கார், பைக் வாங்க போறீங்களா? மாதக்கணக்கில் ‘தவம்’ கிடக்கணும்

7303845உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில், கார் மற்றும் பைக் விற்பனையில் பெரும் தொய்வு ஏற்பட்டது. நாடு முழுவதும், வாகன டீலர்கள் அமைத்திருந்த ஷோரூம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


புதிதாக வாகனம் வாங்க வருபவர்களுக்கு, பணத் தள்ளுடி, மியூஸிக் சிஸ்டம் இலவசம் என பல சலுகைகளை அள்ளிக் கொடுத்தனர். இருந்தாலும், வாகன விற்பனையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்து வாகன விற்பனை சிறிது சிறிதாக முன்னேற்றம் காணத் தொடங்கியது. இப்போது உச்சகட்டத்தில் காணப்படுகிறது. ஷோரூம்களுக்கு, வாகனம் வாங்க சென்றால், முன்பு போல ராஜ மரியாதை கிடைப்பதில்லை. மாறாக, புக்கிங் செய்த பல நாட்களுக்கு பிறகே வாகனம் கிடைக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக மாருதி ரிட்ஸ் காரை வாங்க வேண்டும் என்றால், 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரிட்ஸ் கார் மட்டுமல்ல, வேறு எந்த காரை வாங்க வேண்டுமானாலும், 20 முதல் 45 நாள் காத்திருக்க வேண்டும்.

ஹுண்டாய் நிறுவன தயாரிப்பான ஐ10 மற்றும் ஐ20 கார்களை வாங்க, 20 முதல் 30 நாட்களுக்கு மேல் பொறுத்திருக்க வேண்டியுள்ளது. மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் டிசையர் கார் வேண்டும் என்றால், பணத்தை கட்டி விட்டு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். மாருதி நிறுவனத்தில் இருந்து ஆல்டோ மற்றும் மாருதி 800 கார்கள் மட்டுமே, பணத்தை கட்டினால் உடனே டெலிவரி கிடைக்கிறது.

இதே நிலைத்தான் செவர்லே கார் விஷயத்திலும் காணப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லே க்ரூஸ் கார் வாங்க வேண்டுமென்றால், 20 நாட்கள் பொறுத்திருக்க வேண்டியுள்ளது. இதே நிறுவனத்தின் ஆவியோ கார் என்றால், ஒருமாதம் ஆகி விடுகிறது. டொயோட்டோ ஃபார்ச்சூனர், ஃபியட் லீனியா கார்களுக்கும் டெலிவரி கிடைக்க ஒருமாதம் காலம் எடுத்து கொள்ளப்படுகிறது.

கார் உற்பத்தி நிறுவனங்கள், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. இதற்காகவே, உற்பத்தியின் வேகத்தை குறைத்து விட்டன என்ற குற்றச்சாட்டும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கார்கள் நிலை இது என்றால், இருகர வாகன விஷயத்திலும், காலதாமதம் தான் காணப்படுகிறது. ரூ.51 ஆயிரம் விலை கொண்ட ஹோண்டா ஆக்டிவா வண்டிக்கு, இப்போது பதிவு செய்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி வரை டெலிவரி கிடைக்காது என்றே கூறப்படுகிறது. பிரிமியமாக ரூ.8,000 கூடுதலாக கொடுத்தால், ஆக்டிவா வண்டி உடனே கிடைக்கிறது. இதே போன்ற நிலைமை தான் ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்குக்கும் காணப்படுகிறது. குர்கான் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பிரச்னையே காலதாமதத்துக்கு காரணம் என்று நிறுவனம் தரப்பில் விளக்கம் தரப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *