ஜெய்ப்பூரில் : ஜெய்ப்பூரில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தீயணைப்பு படையினரும், ராணுவத்தினரும் தீவிரமாக போராடியும், நேற்றிரவு வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இப்பயங்கர தீ விபத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றியுள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சீதாபுரம் பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிலிருந்து பெட்ரோல் எடுத்துச் செல்லும் குழாயில், நேற்று முன்தினம் கசிவு ஏற்பட்டு, இரவு 7.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. பெட்ரோல், டீசல் மற்றும் கெரசின் சேமித்து வைத்திருந்த மற்ற டேங்குகளுக்கும் தாவி, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. மொத்தமுள்ள 13 எரிபொருள் டேங்குகளில் ஐந்து டேங்குகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. எரிந்து கொண்டிருக்கும் ஐந்து டேங்குகளில் இரண்டு டீசல் டேங்குகள்; அவற்றில் ஒவ்வொன்றிலும் தலா 20 ஆயிரம் கிலோ லிட்டர் டீசல் இருந்தது. மற்ற மூன்று டேங்குகளில் தலா 10 ஆயிரம் கிலோ லிட்டர் பெட்ரோல் இருந்தது. ஒரு கிலோ லிட்டர் என்பது ஆயிரம் லிட்டர் அளவாகும்.
ஜெய்ப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, மதுரா, பானிபட், ஆமதாபாத் போன்ற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள், நுரையை பீச்சியடித்து தீயை அணைத்து வருகின்றன. இருந்தாலும், தீ இன்னமும் கட்டுக்குள் வரவில்லை. இந்த பயங்கர தீ விபத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூன்று பேர், தொழிலாளர்கள் மூன்று பேர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்; 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அதிகாரிகளிடம் நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
அதன் பின், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:தீ தானாகத்தான் அணைய வேண்டும்; அதற்கு வேறு தீர்வு கிடையாது. வேறு யாரும் எதையும் செய்ய முடியாது; மாற்று வழியும் கிடையாது. தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு, இந்தியன் ஆயில் நிறுவனம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும். பலத்தக் காயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும். இது தவிர, ராஜஸ்தான் மாநில அரசும் நிவாரணம் அறிவித்துள்ளது.தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி, அடுத்த ஆறு வாரங்களில் தன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.தீயை அணைப்பதில் சிறப்பு வாய்ந்த குழுவினர், மும்பை மற்றும் டில்லியில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் எரிந்து நாசமாகியுள்ளது.இவ்வாறு முரளி தியோரா கூறினார்.
பெட்ரோலிய கிடங்கில் எரியும் தீயால், அந்தப் பகுதியே ஒரே புகை மண்டலமாகக் காணப்படுகிறது; 10 கி.மீ., தூரத்தில் உள்ளவர்களும் அதைப் பார்க்க முடிகிறது. எரிந்த சிலரின் உடல்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டேங்குகள் இருக்கும் இடத்தருகே கிடந்தாலும், உடனடியாக அங்கு சென்று, அந்த உடல்களை மீட்க முடியவில்லை.தீ விபத்தின் போது பணியில் இருந்தவர்கள் பற்றிய விவரங்களை, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் ஆவணங்களைப் பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர். தீ விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றிலும் ஏராளமான இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்ளன. அவற்றின் விடுதிகளில் இருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தோர் என, மொத்தம் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூர் – கோடா நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது; ரயில்கள் சிலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Leave a Reply